
பாரத் ஜோடோ யாத்திரையில் கோவிட் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் அல்லது யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், "பாரத் ஜோடோ யாத்திரையின் போது கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வேண்டும். கோவிட் நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், தேசிய நலன் கருதியும், பொது சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஹரியானாவை சென்றடைந்தது. செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து இப்போது ஹரியானாவில் பயணிக்கிறது.