`கெட் அவுட் ரவி', 'ஆளுநரின் ஆளுமையே' - ஆளுநருக்கு எதிராகவும் ஆதரவாகவும் போஸ்டர் யுத்தம்

சென்னையில் ஒட்டப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்
சென்னையில் ஒட்டப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும்  இடையே  ஏற்பட்டுள்ள மோதலின் ஒரு கட்டமாக  ஆளுநருக்கு எதிராகவும் ஆதரவாகவும் போஸ்டர்கள் யுத்தம் தொடங்கியிருக்கிறார்கள் இருதரப்பு  ஆதரவாளர்கள்.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆளுநர் தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் திராவிடம்,  தமிழ்நாடு உள்ளிட்ட பல விஷயங்களில்  தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஆளுநர் அவற்றிற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருவது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில்  உரை நிகழ்த்திய ஆளுநர் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை  முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததும், உரையில் இல்லாதவற்றை சேர்த்து பேசியதும் சர்ச்சைக்கு உள்ளானது.  அது மட்டுமில்லாமல் முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக  ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த விஷயத்தில் பாஜக,  அதிமுக ஆகிய கட்சிகள்  ஆளுநருக்கு ஆதரவான கருத்துக்களையும், மற்ற அனைத்து கட்சிகளும் ஆளுநருக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மோதல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டி போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது. 

சென்னையில் கெட் அவுட் ரவி என்று ஆளுநரை வெளியேற சொல்லும் போஸ்டர்கள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டு சென்னை மாநகர் முழுவதும் பளிச்சிடுகின்றன. அதற்கு பதிலடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 'ஆளுநரின் ஆளுமையே' என்ற தலைப்பில் ஆளுநருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in