`விரைவில் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்': ஓபிஎஸ் ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சலசலப்பு

தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்
தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு செல்லும் வழியில் "அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துகிறோம்" என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வரும் நிலையில், தற்பொழுது ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுகவின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு செல்லும் சாலை மற்றும் அவரது மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், "விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தில் புகார் அளித்த மாவட்ட நிர்வாகிகள்
காவல்நிலையத்தில் புகார் அளித்த மாவட்ட நிர்வாகிகள்

மேலும், போஸ்டர் ஒட்டிய நபரான சுரேஷ் குறித்து விசாரித்தபோது அவர் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவில் தலைமை குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் இபிஎஸ் ஆதரவாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் இவை அனைத்தும் அக்கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே ஒட்டி வந்த நிலையில் தற்பொழுது, ஒரு சாதாரண அதிமுக தொண்டன் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டிய சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சுரேஷ் மீது நேற்று புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இது குறித்து சையதுகான் கூறும்போது, "போஸ்டர் ஒட்டிய நபர் அமமுகவைச் சேர்ந்தவர், அவருக்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை. நேற்று பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இந்நிலையில், இன்று போஸ்டர் ஒட்டிய சுரேஷ் 'இனிமேல் இதுபோன்ற போஸ்டர் ஒட்ட மாட்டேன்' என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in