மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே!

பாஜகவுக்கு பதில் அஞ்சல் அனுப்பியது மதுரை திமுக
திமுக அனுப்பிய அஞ்சல் அட்டை
திமுக அனுப்பிய அஞ்சல் அட்டை

கரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக அரசு. ‘விநாயகர் சதுர்த்திக்கு திமுக தடை போடுகிறது’ என்று பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பிரச்சாரம் செய்வதால், ‘விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் இருந்தே கொண்டாடவும் சிறிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் எந்தத் தடையும் இல்லை’ என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், ”மாற்று மதப் பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்துச் சொல்லும் நம் மாநில முதல்வருக்கு, விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம்” என்று வேண்டுகோள் விடுத்து, நேற்று (06.09.2021) தமிழ்நாடு பாஜகவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை. அதை ஏற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக தொண்டர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

பாஜக தலைவர் வேண்டுகோள்
பாஜக தலைவர் வேண்டுகோள்

இதற்குப் பதிலடியாக, திமுக பேச்சாளர் மதுரை எஸ்.பாலா மற்றும் திமுக தொண்டர்கள், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, பதில் அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர். அதில், ‘மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே. மக்கள் பிரச்சினை பற்றிப் பேசு. அறிவோடு சிந்தி, பகுத்தறிவோடு செயல்படு. வீட்டில் வைத்து விநாயகரை வழிபடுபவர்களுக்கு வாழ்த்துகள்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

திமுக அனுப்பிய அஞ்சல் அட்டை
திமுக அனுப்பிய அஞ்சல் அட்டை
மதுரை எஸ்.பாலா
மதுரை எஸ்.பாலா

இதுகுறித்து மதுரை பாலாவிடம் கேட்டபோது, ”தமிழக முதல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பச் சொல்லி பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்திருந்த வேண்டுகோளை சமூக வலைதளம் வாயிலாகப் பார்த்தேன். என்னவோ, விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு கொண்டாட விடாமல் தடுப்பது போல தவறாகச் சித்தரித்து, அவர் கருத்து சொல்லியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடவோ, வீட்டில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபடவோ எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சரே பலமுறை விளக்கம் சொல்லிவிட்டார். அதற்குப் பிறகும் அதையே வைத்து அரசியல் செய்வதால், அண்ணாமலைக்குப் புரியும் மொழியில் நானும், திமுக தொண்டர்களும் அஞ்சல் அட்டைகளை அனுப்பத் தொடங்கியிருக்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in