பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ள நிலையில் அந்த அமைப்பினைக் கலைப்பதாக அதன் கேரளப் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. அதேநேரத்தில் இன்று ஆழப்புலாவில் அப்துல் சத்தார் கைது செய்யப்பட்டார்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், கேரளத்தில் போதிய அவசாகம் இன்றி பந்த் நடத்தி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் சற்று முன்பு கைது செய்யப்பட்டார். அவரை ஆழப்புலாவில் வைத்து கேரள போலீஸார் கைதுசெய்தனர்.
இதனிடையே நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்னும் முறையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைக் கலைப்பதாக அப்துல் சத்தார் அறிவித்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இதுதொடர்பான அறிக்கையோ, பேட்டியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.