
கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்தும், கேரளத்தில் போதிய அவசாகம் இன்றி பந்த் நடத்தி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் கருநாகப்பள்ளியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று கொல்லம் போலீஸ் கிளப்பில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமையும், அப்துல் சத்தார் பொது அடைப்புக்கு அழைப்பு விடுத்துவிட்டுத் தலைமறைவானதாக அவரைத் தேடிவந்தது. முன்னதாக இந்தியா முழுவதிலும் இருக்கும் விமான நிலையங்களுக்கும் சத்தாரின் விபரங்கள் அனுப்பப்பட்டு, அவர் இந்தியாவை விட்டு வெளியேறாத வகையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கேரளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இன்று மட்டும் 233 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கேரளத்தில் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 2042 பேர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கேரளம் முழுவதிலும் 349 வழக்குகள் பதிவாகி உள்ளன.