ஆளுநர் ரேஸில் பொன்னார்?

குமரி பாஜகவினர் நம்பிக்கை
பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை தெலங்கானா மாநில ஆளுநர் ஆக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் குமரி பாஜக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜக மாநிலத் தலைவராக அவர் இருந்தபோது இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி ஜூலைப் போராட்டம் எனும் பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தார். கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் தொடங்கி, இதுவரை 9 முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், இருமுறை மட்டுமே வென்றார். இருந்தும் குமரி மாவட்டத்தில் பாஜகவுக்கான வாக்குவங்கியைக் கட்டமைத்ததில் அவருக்குத் தனி இடம் உண்டு.

பாஜகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை. அதில் வெகுசிலருக்கே விதிவிலக்காக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது 70 வயதைக் கடந்துவிட்டார். அதனால் அவருக்கு வாக்கு அரசியலில் இருந்து ஓய்வுகொடுக்கும் வயதை எட்டிவிட்டதாகக் கருதுகிறது பாஜக தலைமை. அதேநேரத்தில் குமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு வலுவான வாக்குவங்கியை உருவாக்கி அடித்தளம் இட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவியைக் கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு ஒலிக்கிறது. இப்போது தெலங்கானா மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என இரு இடங்களில் ஆளுநராக இருக்கிறார் தமிழிசை. இந்தச் சூழலில் தெலங்கானா ஆளுநர் பதவியை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக குமரி பாஜகவினர் கூறுகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். இதனால் இருதரப்பு ஆதரவாளர்களையும் இது திருப்திப்படுத்தும் என கணக்குப் போடுகிறது பாஜக தலைமை!

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனை ஆளுநர் ஆக்க வேண்டிய அவசியத்தின் பின்னால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருப்பதாக பாஜகவினர் சொல்கின்றனர்.

அண்ணாமலை பதவிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு தெரிந்து சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்குக் கூட அவரால் பெரிய பதவிகள் எதுவும் போட முடியவில்லையாம். மூத்த தலைவர் என தலைமை பெரிதும் மதிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, சி.பி.ராதாகிருஷ்ணன் வரை சீனியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை பெரிய பொறுப்புக்கு கொண்டுவர மூவ் செய்கின்றனர். பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாஜகவைப் பொறுத்தவரை தலைவர் பெரிய பதவியாக இருந்தாலும், அமைப்புச் செயலாளர் சம்மதத்துடனே பொறுப்புகளைப் போட முடியும். கேசவ விநாயகம், பொன்னாரின் தீவிர ஆதரவாளர் மற்றும் நண்பர்.

அண்ணாமலை கட்சியில் தன்னிச்சையாகச் செயல்பட சீனியர் தலைவர்களை ஆளுநர் ரேஸ் நோக்கி நகர்த்தியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களோ, ‘பொன்னார் இருமுறை மத்திய அமைச்சராக இருந்தவர். சட்டம் படித்தவர். பாஜகவின் வளர்ச்சிக்காகத் திருமணமே செய்து கொள்ளாதவர். இப்போது 70 வயதைக் கடந்துவிட்டதால் அவர் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் சீக்கிரமே ஆளுநராக்கப்படுவார். இது அவர் உழைப்புக்கான அங்கீகாரமே’ என்கிறார்கள்.

பொன்னார் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in