ஈபிஎஸ் விசுவாசிகளை அம்பலப்படுத்திய பொன்னையன்? - ஆடியோ வெளியிட்டு தெறிக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஈபிஎஸ் விசுவாசிகளை அம்பலப்படுத்திய பொன்னையன்? - ஆடியோ வெளியிட்டு தெறிக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்!

அதிமுகவில் நடக்கும் அடிதடிகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள பொன்னையனும் ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பனும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான், நாஞ்சில் கோலப்பனும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனும் பேசிய ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் கோலப்பன், “என்னண்ணே... கட்சி நிலவரம் இப்படி போகுது. தலைவர் காலத்தில இருந்து கஷ்டப்படுறோம். தொண்டர்களை யாரும் பார்க்கறதே இல்லை. தலைவர்களைத்தானே பார்க்கிறாங்க” என்கிறார்.

எதிர் முனையில் பொன்னையனின் குரலாக, “தொண்டர்களெல்லாம் இரட்டை இலைக்குப் பின்னால் நிற்கறாங்க. தலைவர்கள்தான் பணத்தின் பின்னால நிக்கிறாங்க. தங்கமணி தன்னை காப்பாத்திக்க ஸ்டாலின் பின்னால ஓடுறாரு. கொள்ளையடிச்சு கோடீஸ்வரனா இருந்து பணத்தை காப்பாத்தறதுக்கு இப்படி ஆடுறாங்க. குவாரி பிசினஸ்ல மாசம் ரெண்டு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் கே.பி.முனுசாமி. துரைமுருகன்தான் அவங்க மந்திரி. கே.பி.முனுசாமி ஸ்டாலினை திட்றதை நிறுத்திட்டாரு. வேலுமணி, தங்கமணி எடப்பாடி பழனிசாமியை கையில வச்சிருக்காங்க. ரெண்டு பேரும் இல்லைன்னா எடப்பாடிக்கு வேற வழியில்லை. முதலமைச்சர் பதவி வேணும்கிறதுக்காக எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எல்லார் கையிலயும் சிக்கியிருக்கார். நாளைக்கு கே.பி. முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வேட்டு வச்சிடுவாரு. டிஜிபி தேவாரம் கே.பி. முனுசாமிக்கு நக்சலைட் தொடர்பு இருக்குன்னு சொன்னதால தலைவரே ஒதுக்கி வச்சார்” என்று ஒலிக்கிறது.

இடையிடையே பேசும் கோலப்பன், “அப்புறம் அம்மாவிடம் பணிவோட வந்தாரு. அவங்களும் எம்பி தேர்தலோட ஒதுக்கி வச்சிட்டாங்க. இன்னைக்கு எத்தனை கோடி சம்பாத்தியம் இருக்கு. ஆவின் எடத்துல இருபது வருஷத்துக்கு அவருக்கு காண்ட்டிராக்ட் கொடுத்திருக்காங்க. அவரு இப்ப நல்லா வளர்ந்துட்டாரு” என்கிறார்.

எதிர் முனையில் பொன்னையனின் குரல், “ஸ்டாலின் தயவு வேணும்ங்கறதால நாம அவரை திட்றது கிடையாது. அண்ணாமலைதான் திட்டுறாரு. அண்ணாமலைதான் இன்னைக்கு இரண்டாவது இடத்துல உட்கார்ந்துக்கிட்டிருக்காரு. நம்ம ஆளுங்க பூரா கோடிகோடியா சம்பாதிச்சிட்டு, ஸ்டாலின் ஈட்டியால வாயில குத்துவார்னு வாயை முடிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் 100 கோடி 200 கோடி வச்சிருக்காங்க. அம்மா காலத்துல மாவட்ட செயலாளருக்கு 1.5 சதவீதம்தான் கமிஷன். எடப்பாடி பழனிசாமி காலத்துல 15 பர்சன்ட் கமிஷன் கிடைச்சுது. அதையும் மாவட்ட செயலாளர்களே எடுத்துக்கிட்டு, அவங்களுக்குத் தேவையானவங்களுக்கு பிரிச்சுக் குடுத்தாங்க. தலைமைக் கழகத்திற்கு எதுவுமே கொடுக்கல. எம்எல்ஏ-க்களை கொள்ளையடிக்க நாலு வருஷமா எடப்பாடி விட்டுட்டாரு. அவர் முதுகிலேயே எம்எல்ஏ-க்கள் குத்திட்டாங்க. அதனாலதான் அவங்க சொல்றதுக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலையாட்டுறார்.

சி.வி. சண்முகம் என் பையனை விட நாலு வயது இளையவன். பகல்லயே குடிச்சிக்கிட்டிருப்பான். அவன் கையில 19 எம்எல்ஏ இருக்காங்க. சாதி அடிப்படையில அவங்க எம்எல்ஏ-க்கள் இருப்பதால அவரு பின்னால அவங்க தொங்கறாங்க. கொங்கு நாட்டுல 42 எம்எல்ஏ-க்கள் இருக்கறாங்க. அதுல எடப்பாடி கையில ஒன்பது பேருதான். மீதிப்பேரை வேலுமணி, தங்கமணி அவனுங்க கையில வச்சிருக்காங்க. ரெண்டு பேரும் துரத்துனா எடப்பாடிக்கு வேற வழியே இல்லை. நாளைக்கு எடப்பாடியை கவுக்கறதுக்கே தயாராகிடுவாங்க. கொள்கையை காத்துல பறக்கவிட்டுட்டு பதவி பின்னால போறாரு எடப்பாடி பழனிசாமி. யாருமே கட்சிக்கும், அம்மாவுக்கும் விசுவாசமா இல்லை” என்கிறது.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட இந்த ஆடியோ அதிமுக வட்டாரத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கும் அதேசமயம், ”இந்த ஆடியோவில் உள்ளது எனது குரல் இல்லை” என பொன்னையன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in