`அதிமுகவை அழித்துவிட்டு, பாஜக வளரத் துடிக்கிறது'- எச்சரிக்கும் பொன்னையன்!

`அதிமுகவை அழித்துவிட்டு, பாஜக வளரத் துடிக்கிறது'- எச்சரிக்கும் பொன்னையன்!
பொன்னையன்

``பாஜக, அதிமுகவின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், அந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல'' என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொன்னையன், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், “பாஜக, அதிமுகவின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், அந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக பாஜகவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது எனக் கர்நாடக பாஜக தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜகவினர் வாய் மூடி மௌனம் காத்து வருகிறார்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை சமூக வலைத்தளங்கள் மூலம் அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவினர் அம்பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு, பாஜக வளரத் துடிக்கிறது. இதனால் அதிமுகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in