வைரலாகும் புகைப்படம்... 'மாமன்னன்' பாணியில் அவமானப்படுத்தினாரா அமைச்சர் பொன்முடி?

பொன்முடி வீட்டில் நிற்கும் திமுக நிர்வாகிகள்
பொன்முடி வீட்டில் நிற்கும் திமுக நிர்வாகிகள்

அமைச்சர் பொன்முடி, 'மாமன்னன்' படப்பாணியில் திமுக நிர்வாகிகளை அமர வைக்காமல் நிறுத்தி வைத்தபடி பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில்  அக்.1-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில ஆதிதிராவிடர் நல அணி, சிறுபான்மையினர் அணி இணைந்து விழுப்புரம் மத்திய மண்டலம் சார்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இதற்கான ஆலோசனைகளைப் பெற ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். அப்போது, அமைச்சர் பொன்முடி அமர்ந்தவாறு, வந்தவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பியதாக புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது. அதில்  ”இருக்கை காலியாக இருந்தும் அமர வைக்கப்படாதது ஏன்?  'மாமன்னன்' படப்பாணியில்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இந்நிலையில் இது குறித்து முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 26-ம் தேதி நானும், வி.பி.ராஜனும் அமைச்சர் பொன்முடியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றோம். அப்போது அவர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.  அதை வி.பி.ராஜன் குனிந்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படமாகும். நாங்கள் அமைச்சர் வீட்டில் உணவருந்திவிட்டுதான் வந்தோம். 

சில விஷயங்களில் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் வெளியே சொல்வது தவறானது என்று கருதுகின்றேன். இதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்கவேண்டாம்"  என்று தெரிவித்துள்ளார்.

சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சந்திக்க வருபவர்களை எழுந்து நின்று வரவேற்று, நின்றபடியே அவர்களிடம் வந்த காரணத்தை கேட்டறிந்து அனுப்பி வைப்பதும் உண்டு. தான் அமர்ந்து இருந்தால், வருபவர்களை அமர சொல்ல வேண்டும். அதைவிட நிற்கவைத்து பேசி  அனுப்பிவைத்து மாய பிம்பத்தை உருவாக்கி மறைமுகமாக மரியாதை குறைவாக நடத்துபவர்களும் உண்டு என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம்  திமுக தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி, அமைச்சர் பொன்முடி வீட்டில் தரையில் அமர்ந்து இருப்பது போல புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in