‘பொங்கலோ பொங்கலு’க்கு போட்டியாக ஒலிக்கும் ‘தமிழ்நாடு வாழ்க’!

‘பொங்கலோ பொங்கலு’க்கு போட்டியாக ஒலிக்கும் ‘தமிழ்நாடு வாழ்க’!

பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் ஒலிக்க வேண்டிய ’பொங்கலோ பொங்கல்’ குலவைக்கு போட்டியாக, ’தமிழ்நாடு வாழ்க’ என்ற முழக்கம், தமிழ்நாட்டின் திசையெங்கும் ஒலித்து வருகிறது. தமிழ்நாட்டின் வாழ்வியலில் அரசியல் ஊறிய அதிசயமும் வெளிப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கல் கொண்டாட்டத்தின் அங்கமாகவே தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கம் எதிரொலித்து வருகிறது. இல்லங்கள் தோறும் பொங்கலை வரவேற்கும் விதமாக இடப்பட்ட கோலங்களில் காட்சியளித்த இந்த முழக்கம் திருநாளுக்கு சுவாரசியம் சேர்த்துள்ளன.

சமூகத்தின் சாளரமான சமூக ஊடகங்கள் இவற்றை உடனுக்குடன் பிரதிபலித்தும் வருகின்றன. கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்த #தமிழ்நாடு உடன், பொங்கலை முன்னிட்டு 3 நாட்களாக #தமிழ்நாடு_வாழ்க ட்ரெண்டிங்கில் தொடர்கிறது. இந்த ட்ரெண்டிங் பதிவுகளுடன் இணைந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.

வீட்டு வாசல்களில் வண்ணப்பொடிகளில் அலங்கரிக்கும் கோலங்கள், பொங்கல் நிகழ்வுகளின் சித்தரிப்புகள் ஆகியவற்றின் அங்கமாகவும் தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கம் இடம் பெற்றிருக்கிறது. சர்வமத வழிபாட்டுத் தலங்களின் பின்னணியில் வைக்கப்படும் பொங்கல், பொங்கல் கோலத்தில் இடம்பெற்ற சர்வமத சித்தரிப்புகள் போன்றவையும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன.

முக்கியமாக, பொங்கலை சித்தரிக்கும் வண்ணமயமான கோலங்கள் அனைத்திலும் ’தமிழ்நாடு வாழ்க’வும் இடம்பிடித்துள்ளது. ’கலர் பவுடர் பூசி விளையாட நாங்க என்ன வட நாடா. உயிரை வச்சு விளையாடும் தமிழ்நாடுடா’ என்ற வாசகங்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு கோலம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கூடவே பொங்கல் வைக்கும் நிகழ்வுகளில் பொங்கலோ பொங்கல் குலவைக்கு நிகராக தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கமும் ஒலித்து வருகின்றன.

இவற்றின் மத்தியில் ‘இன்னைக்கு யாரோ தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதுன்னு..’ என்று தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக குரலும் அதிகம் பகிரப்படுகிறது. இந்த குரலின் பின்னணியில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற வார்த்தைகளை வைத்தே ஒருவர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை வரையும் வீடியோவும் அதிகம் பகிரப்படுகிறது.

முதல்வர் - ஆளுநர் இடையே தமிழ்நாட்டில் முற்றும் உரசலின் அடுத்த கட்டமாகவும் இவை பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் தனித்துக்காட்டும் விதமாகவும் பொங்கல் திருநாட்களில் எதிரொலித்த ‘தமிழ்நாடு வாழ்க’ முழக்கம் உணர்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in