பாஜக இன்னும் சில விஷயங்களில் கவனமாகச் செயல்பட வேண்டியதிருக்கிறது!

பொன்.ராதாகிருஷ்ணன் பளிச் பேட்டி
பாஜக இன்னும் சில விஷயங்களில் கவனமாகச் செயல்பட வேண்டியதிருக்கிறது!

கட்சியில் பெரிய பதவி ஏதும் கொடுக்கப்படவில்லை என்றாலும், சளைக்காமல் வேலை செய்வதில் பாஜகவினருக்கு நிகர் பாஜகவினர்தான். பதவியும் கொடுத்தால் கேட்கவா வேண்டும்? பாஜக உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், அந்தப் பணி நிமித்தமாக மதுரை வந்திருந்தபோது, அவருடன் 'காமதேனு'வுக்காக ஒரு பேட்டி.

‘முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது’ என்று விவசாயிகள் போராடத் தொடங்கியிருக்கிறார்களே?

இந்தப் பிரச்சினையை திமுக சாதாரணமாக நினைத்துக்கொண்டு செயல்படக் கூடாது. பெரியாற்றின் குறுக்கே 1895-ல் கட்டப்பட்ட இந்த அணை, முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்காகக் கட்டப்பட்டது. கேரளத்துக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பல அம்சங்களை உள்ளடக்கி, 999 ஆண்டுகள் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெறும் 125 ஆண்டுகளிலேயே மீற முயல்வதை ஏற்கவே முடியாது. பெரியாறு அணை உரிமைக்காக பாஜகவும் நிறையப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. பி.டி.ஆர். தலைமையில் 10 நாட்கள் பாத யாத்திரை நடந்தபோது, நானும் கூட சேர்ந்து நடந்திருக்கிறேன். அந்த அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடாது எனும் நிலை இருந்தபோது, பாஜக ஆட்சியில்தான் நமக்கு 142 அடி என்ற உரிமை மீட்டெடுக்கப்பட்டது. மத்திய குழுவும் பலமுறை ஆய்வுசெய்து அணை பலமாகத்தான் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்துவிட்டது. அணையைப் பலப்படுத்தும் வேலையையும் தமிழக அரசு செய்து முடித்துவிட்டது. எந்த ஒரு பாதிப்பும் இல்லாதபோது, திமுக அரசு ஏன் தேவையில்லாமல் தண்ணீரைக் கேரளத்துக்குத் திறந்துவிட்டது? அதுவும் கேரள அமைச்சரும் அதிகாரிகளுமே தன்னிச்சையாகத் திறந்துவிட எப்படி அனுமதித்தார்கள்? இது ஒன்றும் திமுக அரசு கட்டிய அணையோ, அவர்கள் வாங்கித்தந்த உரிமையோ அல்ல. பென்னிகுவிக் வாங்கித் தந்த உரிமை. அதை விட்டுத்தர திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஆனால், காங்கிரஸ் கட்சியைப் போல பாஜகவும் அங்கொரு நிலைப்பாடும் இங்கொரு நிலைப்பாடும் எடுக்கிறதே?

தேசியக் கட்சிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அங்கொரு நிலைப்பாடும், இங்கொரு நிலைப்பாடும் எடுப்பார்கள் என்று பேசுவதெல்லாம் பழைய கதை. உண்மையில், அப்படிக் கிடையாது. தமிழக கம்யூனிஸ்ட்கள் முல்லை பெரியாறு அணைக்காக எங்கே குரல் கொடுக்கிறார்கள்? பாஜகவினர் அப்படியா இருக்கிறோம்? என்னதான் இருந்தாலும் நான் தமிழன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்கிற முறையில் என்னுடைய மாநில உரிமைக்குக் குரல் கொடுப்பேன். அதேபோல அங்கிருக்கிற பாஜகவினர் அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்குகிற வகையில் செயல்பட்டாக வேண்டும். பொதுவாகப் பார்க்கிறபோது இங்கிருக்கிற பாஜக, அங்கிருக்கிற பாஜக நிலைப்பாடு எதுவும் முக்கியமல்ல. சட்ட ரீதியான நிலை என்ன, பாதுகாப்பு ரீதியான நிலை என்ன என்பதை மட்டும் பார்த்தால் போதும். அதனால் முல்லை பெரியாறு என்றாலும் சரி, காவிரிப் பிரச்சினை என்றாலும் சரி, தமிழ்நாட்டின் உரிமையைத் தமிழக பாஜக விட்டுக்கொடுக்காது.

அணையைப் பார்வையிடும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி
அணையைப் பார்வையிடும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி

13 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவின் மோசமான தோல்வி, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்கிறார்களே?

இடைத்தேர்தல்களில் பாஜக ஒன்றும் மோசமாகத் தோற்கவில்லை. கலவையான முடிவுதான் வந்திருக்கிறது. பாஜக பல புதிய இடங்களைக் கைப்பற்றி, சில இடங்களை இழந்திருக்கிறது. அதுதான் காங்கிரஸுக்கும் நடந்திருக்கிறது. மேற்கு வங்கத் தேர்தல் முடிவைப் பொருட்படுத்தக்கூடாது. அங்கு நடப்பது இன்னொரு திமுக ஆட்சி. ஜனநாயகத்துக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. எனவே, இதை வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அதேநேரத்தில், ஒரு விஷயத்தை நான் ஒப்புக்கொள்கிறேன், பாஜக இன்னும் சில விஷயங்களில் கவனமாகச் செயல்பட வேண்டியதிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

‘தமிழ்நாடு அரசுக்கென தனி வங்கி தொடங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதை வரவேற்கிறீர்களா?

ஏற்கெனவே, கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவை மக்களுக்குப் பயன்பட்டனவா அல்லது ஆளுங்கட்சிக்காரர்களுக்கு அதிகம் பயன்பட்டனவா? திமுக தொடங்கினால், அது தமிழக மக்களுடைய வங்கியாக இருக்க நிச்சயமாக வாய்ப்பே கிடையாது. அது திமுக வங்கியாகத்தான் இருக்கும். எனவே, மக்கள் வரிப்பணத்தை விரயமாக்காமல், திமுக வேறுவழியில் சேர்த்த பணத்தை எல்லாம் ஒன்று திரட்டி, ‘திமுக வங்கி’யை வேண்டுமானால் உருவாக்கட்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அவற்றை அகற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகூட கொடுத்தது. தமிழகத்தின் தென்கோடியைச் சேர்ந்தவர் என்கிற முறையில் அவற்றை அகற்ற குரல் கொடுப்பீர்களா?

அந்தத் துறையின் இணை அமைச்சராக இருந்தவன் நான். ஒரு பைசா செலவில்லாமல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் போவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று பல முறை யோசித்திருக்கிறேன். இதுபற்றி எங்கள் துறை அதிகாரிகளிடமும், அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடமும் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 5 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். அதைப்போல பல மடங்கு பேர் ஊனமடைகிறார்கள். இதை எல்லாம் தவிர்க்கிற வகையில் நல்ல தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும், போட்ட சாலைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்றால் நிறைய பணம் தேவை. அதனால்தான் சுங்கச்சாவடிகள் நடத்தப்படுகின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காரணம், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளைக் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர்கள் அவர்கள். நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய், நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் என்று அவர்கள் சொன்னதுபோலத்தான் இதுவும்.

சாமானிய இந்து ஒருவர் கிறிஸ்தவ ஆலயத்துக்கோ, பள்ளிவாசலுக்கோ போனால் கடுமையாக விமர்சிக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், பிரதமர் மோடி வாடிகனுக்குப் போய் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றிருக்கிறாரே?

யார் அப்படி விமர்சித்தார்கள்? பாஜகவில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்களே? இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பாஜகவில் பணியாற்றி பெரிய பெரிய பொறுப்புகளில் எல்லாம் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் பாஜகவின் சிறுபான்மைப் பிரிவில் அல்ல, பேரன்ட் பாடியிலேயே பொறுப்பில் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த மதம், எந்த சாதி, எந்தக் கட்சி என்பது எல்லாம் பிரச்சினை கிடையாது. நாட்டுக்கு உண்மையானவர்களா என்பதுதான் எங்களது அளவுகோல். நாட்டுப்பற்று இல்லாதவன் இந்துவாகவே இருந்தாலும், அவனைக் கொண்டாடுவதில் என்ன பெருமையிருக்கிறது?

வாஜ்பாய் ஆட்சி எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைத்துப் போகிற ஆட்சியாகவும், வளர்ச்சியை நோக்கிய ஆட்சியாகவும் இருந்தது. ஆனால், மோடி ஆட்சியானது மதரீதியாகப் பிரிவினைவாதத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும்தானே வளர்த்தெடுத்திருக்கிறது என விமர்சிக்கப்படுகிறதே?

வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த சிறுபான்மை அமைச்சர்கள் இன்றைக்கும் மோடி அமைச்சரவையில் அமைச்சர்களாகத் தொடர்கிறார்களா இல்லையா? இருக்கிறார்களே. முதலில் இங்கே சிறுபான்மை - பெரும்பான்மை என்று பேசுவதே தவறு. கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் என்னுடைய சகோதரன். ஒரு குடும்பத் தலைவர் எப்படி எல்லாப் பிள்ளைகளையும் ஒன்றாக நடத்துவாரோ, அப்படித்தான் பாஜக அரசு நடத்துகிறது. இதில் வாஜ்பாய், மோடி ஆட்சிக்கு இடையே வித்தியாசம் எல்லாம் இல்லை. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டதே, அதை மோடி அரசாங்கம் நிறுத்திவிடவில்லையே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in