
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விக்டோரியா கெளரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர் ஏற்கெனவே மத்திய அரசு வழக்கறிஞராக இருந்தவர்.
இந்துத்துவ சிந்தனை கொண்ட விக்டோரியா கெளரி, பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளராக பதவி வகித்தவர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொன்னாருக்குப் போட்டியாக தொடர்ந்து சீட் கேட்டு வந்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் பொன்னாருக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும் மேலிட செல்வாக்கை வைத்து, பாஜக மகளிரணியின் தேசிய செயலாளர், சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குநர், மத்திய அரசு வழக்கறிஞர் என பல பதவிகளில் கோலோச்சினார்.
முன்பு தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது கொண்டாடியதைப் போலவே தற்போது விக்டோரியா கெளரி உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டதையும் பொன்னார் ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அண்ணாச்சிக்கு ரூட் க்ளியர் ஆகிவிட்டதாம்!