96 தொகுதிகளில் இன்று 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

4ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
4ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் இன்று 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

18வது மக்களவைத் தேர்தலில் இன்று 4ம் கட்டமாக 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட் ஒடிசாவில் தலா 4 தொகுதிகள் மற்றும் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீ நகர் தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் 8.97 கோடி ஆண்கள், 8.73 கோடி பெண்கள் உள்பட மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக மொத்தம் 1.92 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தெகுதிகளுடன் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

தெலுங்கு தேசம், பாஜக, ஜன சேனா ஆகியவை ஓர் அணியாகவும், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து ஓர் அணியாகவும் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஒடிசா, ஆந்திர பிரதேசம்
ஒடிசா, ஆந்திர பிரதேசம்

இதேபோல் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும், 28 சட்டப் பேரவைத் தொகுதிகளும் இன்று முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன. அம்மாநிலத்திலும் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய் தொகுதி), அர்ஜுன் முண்டா (குந்தி), சாமஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் (கன்னோஜ்), முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் (பஹ்ராம்பூர்), ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா (கடப்பா), திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா (கிருஷ்ணா நகர்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் களத்தில் உள்ளனர்.

இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நாட்டில் வாக்குப்பதிவு நிறைவுற்ற மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 379 ஆக உயரும்.

எஞ்சியுள்ள 164 தொகுதிகளுக்கு வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in