‘சித்து மூஸ்வாலா கொலையை அரசியலாக்காதீர்கள்' - அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொல்லப்பட்டதை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸேவாலா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தனது கும்பல் மூலம் இந்தப் படுகொலையை அரங்கேற்றியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்களை போலீஸார் மறுத்துள்ளனர். இது பழிவாங்கும் வகையில் நடந்திருக்கும் கொலை என்றும் தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் விசாரணை அதிகாரிகளிடம் லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

சித்து மூஸேவாலாவுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை பஞ்சாப் மாநில அரசு திரும்பப்பெற்ற அடுத்த நாளே இந்தக் கொலை நடந்ததால் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், “பஞ்சாபில் எந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தாலும் அவற்றைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். சித்து மூஸேவாலா கொல்லப்பட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்" என்று கூறினார். ஆனாலும் சர்ச்சை அடங்கியபாடில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in