உருது மொழியில் தீபாவளி வாழ்த்து வாசகம் கூடாதா?: #BoycottFabIndia விவகாரம் அலசல்

உருது மொழியில் தீபாவளி வாழ்த்து வாசகம் கூடாதா?: #BoycottFabIndia விவகாரம் அலசல்

இந்தி மொழி தெரியாத தமிழ் வாடிக்கையாளரை அவமதித்த உணவு விநியோக நிறுவன விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள், ஆடை நிறுவனத்தின் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது வேறுவிதமான சிக்கல்.

இரு விளம்பரங்களில் இடம்பெற்ற இரு காதல் ஜோடிகளின் சாதிகள் குறிப்பிடப்பட்டிருந்தால் இங்கும் ரகளை ஆகியிருக்கும். வடக்குக்கு மதம் என்றால், தெற்குக்குச் சாதியன்றோ!

உருது மொழியில் ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என்ற வாசகம் பிரபலம். ‘ஜஷ்ன இ ரிவாஸ்’ என்ற இந்த வாசகத்தைப் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க விளம்பரபடுத்தியது, பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஃபேப்இந்தியா. உடனே வெகுண்டெழுந்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, ”உருது மொழியில் இந்து பண்டிகைக்கான அழைப்பா” என்று புறப்பட்டார். #BoycottFabIndia என்ற ஹேஷ் டேகை ட்விட்டரில் சொடுக்கினார். அவரை பின்தொடர்ந்து, வலதுசாரி ஆதரவாளர்கள் புற்றீசல்போல் ஃபேப் இந்தியா நிறுவனத்தை பகிஷ்கரிக்கும் ட்வீட்டை ட்ரெண்டிங் செய்தனர்.

‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்!’

அதிர்ந்துபோன ஃபேப்இந்தியா நிறுவனம், ”தீபாவளி பண்டிகைக்கும் இந்த விளம்பரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்து பண்டிகையை அவமதிக்கவில்லை. அந்த விளம்பர வாசகத்தையே அகற்றிவிட்டோம்” என்று விளக்கம் அளித்தது. முன்னதாக அக்டோபர் 9 அன்று, “ஒளியும் அன்பும் பொங்கி வழியும் பண்டிகையை வரவேற்கும் விதமாகவும் இந்தியப் பண்பாட்டுக்கு அழகுற மரியாதை செலுத்தும் விதமாகவும் ‘ஜஷ்ன இ ரிவாஸ்’ கலெக்‌ஷனை ஃபேப்இந்தியா அறிமுகப்படுத்துகிறது” என்று ஃபேப்இந்தியா நிறுவனம் ட்வீட் செய்திருந்தது.

இந்நிலையில் #BoycottFabIndia கிளம்பிய பிறகு, அந்த ட்வீட்டை அந்நிறுவனம் நீக்கிவிட்டது. மேலும் ஃபேப்இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், ”இந்தியாவின் பல்சமய பண்பாடுகளைக் கொண்டாடுவதில் ஃபேப் இந்தியா எப்போதும் துணையாக நின்றிருக்கிறது. ‘ஜஷ்ன இ ரிவாஸ்’ என்பதையும் அவ்வாறே முன்வைத்தோம். அது தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வாசகம் அல்ல” என்று நிறுவனத்தின் சார்பாகத் தன்னிலை விளக்கம் அளித்தார்.

தொடர்கதை!

கடந்த ஆண்டு டாடா குழுமத்தின் தனிஷ்க் ஆபரண நிறுவனம், இந்து மருமகளுக்கு வளைகாப்பு விழா எடுக்கும் இஸ்லாமிய உறவுகள் என்ற அன்பையும் ஒற்றுமையும் போதிக்கும் விளம்பரப்படத்தை வெளியிட்டது. அப்போதும் வலதுசாரிகள் குண்டர்படையை ஏவிவிட்டு தனிஷ்க் நகைக்கடைகளை அடித்து நொறுக்குவது, அதன் கடை ஊழியர்களை மிரட்டுவது என்று இறங்கினர். அதை அடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2019-ல். இரு வேறு மதங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஹோலி பண்டிகையை இணைந்து கொண்டாடுவது போன்ற விளம்பரத்தை சர்ஃப் எக்சல் நிறுவனம் வெளியிட்டபோதும், இதே விதமான அச்சுறுத்தல் ஏவிவிடப்பட்டு அந்த விளம்பரமும் நீக்கப்பட்டது.

பெண் வெற்றிக்கு ஸ்வீட் எடு கொண்டாடு!

விளம்பர உலகமோ வணிகமயமானதுதான். என்றாலும், காலத்துக்கும் சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப அத்துறையினர் தங்களது விழுமியங்களைப் புடம்போட்டுக் கொண்டே வருகிறார்கள். அண்மையில் வெளியான ‘டெய்ரி மில்க்’ இனிப்பு விளம்பரமும் அதற்கு உதாரணம். 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் கிரிக்கெட் வீரனின் சிக்சருக்கு அவனது காதலி ‘ஸ்வீட் எடுத்துக் கொண்டாடினார்’. 2021-ல் அதே விளம்பரம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அதேநேரம் தேய்வழக்கைப் புரட்டிப்போட்டது. இம்முறை பெண் கிரிக்கெட் வீராங்கனை அடித்த சிக்சருக்கு அவளது காதலன் துள்ளி வந்து அவளுக்கு மிட்டாயை ஊட்டிவிட்டான். ஆண் வெற்றியாளன், அவனுடைய வெற்றிக்குப் பின்னால் ’மட்டுமே’ பெண் துணை நிற்பாள் என்ற அரதப் பழசான வழக்கை, அந்த விளம்பரம் அழகியலுடன் மாற்றியது.

இதேபோன்று கடந்த ஆண்டு வெளிவந்த த்ரீ ரோசஸ் தேநீர் விளம்பரத்தில், தனது மகளுக்கு சுயசாதி மாப்பிள்ளை தேடும் அப்பாவிடம் மகள், தான் கரம் பிடிக்க நினைக்கும் காதலனை பற்றி தெரியப்படுத்துவார். ’இந்த போகியன்று பழைய எண்ணங்களை எரிப்போம்’ என்று சாதி மறுப்பை அந்த விளம்பரம் நிறம், திடம், சுவையுடன் காட்சிப்படுத்தியது.

இவ்விரு விளம்பரங்களும் பரவலாக தமிழ்ச்சமூகத்தால் கொண்டாடப்பட்டன. ஒருவேளை இந்த இரு விளம்பரங்களில் இடம்பெற்ற இரு காதல் ஜோடிகளின் சாதிகள் குறிப்பிடப்பட்டிருந்தால், இங்கும் ரகளை ஆகியிருக்கும். வடக்குக்கு மதம் என்றால், தெற்குக்குச் சாதியன்றோ!

உருது முஸ்லிம்களின் மொழியா?

இந்நிலையில், ஃபேப்இந்தியாவின் விவகாரத்துக்கு வருவோம். பல சிக்கல்களின் ரிஷிமூலத்தைத் தேடிச் சென்றாலே, அதற்குப் பின்னால் இருக்கும் மாயையும் அதை வைத்துச் செய்யப்படும் அரசியல் சூழ்ச்சியும் அம்பலமாகிவிடும். அப்படித்தான் ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என்ற அழகிய வாசகத்தைத் தாங்கி நிற்கும் ‘ஜஷ்ன இ ரிவாஸ்’ உருது மொழி சிக்கலும்.

உருது மொழி முஸ்லிம் மக்களின் மொழி. அதிலும் பாகிஸ்தானியர்களின் தாய்மொழி. இந்தி இந்துக்களின் மொழி என்கிற நம்பிக்கையில் இருந்து ஊற்றெடுக்கும் சிக்கல் இது. ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கான விடையைத் தேடிச் சென்றாலே தெளிவு கிடைத்துவிடும். “உருது மொழியை இஸ்லாமியர்கள் மட்டும்தான் பேசுகிறார்களா?” என்ற கேள்விதான் அது.

இந்திக்கும் உருதுக்கும் ஒரே இலக்கணம்!

இந்தி மொழி தேசிய மொழி என்ற விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பு தானாக வந்துவிடுகிறது. இந்தியாவின் தேசிய மொழிகளில் உருது மொழியும் ஒன்று என்பது வேறு விஷயம். அடிப்படையிலேயே இந்தியும் உருதும் சகோதரிகள் என்பதைத்தான் இங்கு புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்தி, உருது 2 மொழிகளுக்கும் ஒரே இலக்கணம்தான் என்கிறனர் மொழியியல் அறிஞர்கள். ஆனால், என்ன உருதுவில் பெர்ஷிய, அரேபிய வேர்ச்சொற்கள் பல உள்ளன. இந்தியில் சமஸ்கிருத சொற்கள் பல உள்ளன.

உருது மொழிக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. அதிலும் ‘திருக்குர்ஆன்’ அரேபிய மொழியில்தான் எழுதப்பட்டுள்ளதே தவிர, உருது மொழியில் இல்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

இந்தியாவில் தோன்றிய மொழி!

அதைவிடவும் முக்கியம் உருது மொழியின் தோற்றுவாயே இந்தியாதான். சிந்து பகுதியில், 711-ல் இஸ்லாமிய ஆட்சி நிலைபெற்றபோது உருது மொழி உருவானதாக தெரியவருகிறது. பிறகு டெல்லியில் 12-ம் நூற்றாண்டில் சுல்தான்களின் ஆட்சித் தொடங்கி, 16-ம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி நிலைத்தபோது மக்களின் மொழியாக உருது மாறியது. பின்னர், தெற்கு நோக்கிப் பரவவே பஞ்சாபி, ஹரியாணா ஆகிய மொழிகளின் தாக்கத்தையும் உள்வாங்கி அம்மொழிகளோடும் இரண்டற கலந்தது.

சொல்லப்போனால் உருது மொழிக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. அதிலும் ‘திருக்குர்ஆன்’ அரேபிய மொழியில்தான் எழுதப்பட்டுள்ளதே தவிர, உருது மொழியில் இல்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. சீக்கியர்கள், வங்க மொழியினர், தெலுங்கர்கள்கூட உருது மொழி பேசக்கூடியவர்களாக இருப்பதைவைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் பேசுவதைக் காட்டிலும் ஹைதராபாத்தில் கலப்பில்லாத உருது பேசும் மக்கள் (இஸ்லாமியர்கள் அல்லாதோரும்) இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுதவிர இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதன்மையான வாசகமான, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ உருதுதான். 1921-ல் இந்த வாசகத்தை வடித்தவர் மவுலானா ஹஸ்ரத் மொஹானி. புரட்சியாளன் பகத்சிங்குக்கு விடுதலை உணர்வெழுச்சி ஊட்டிய வாசகம் இதுவன்றோ!

பகத்சிங்கின் வாசகம்!

அதேபோல, சிறப்பான உருது இலக்கியப்படைப்புகளை இந்துக்களும் சீக்கிய படைப்பாளிகளும் கொடுத்திருப்பதாக அறியப்படுகிறது. உ.பி, பிஹார் மாநிலங்களில் இந்து கயாசத் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் வழித்தோன்றல்கள் உருது, இந்தி ஆகிய 2 மொழிகளிலும் புலமை படைத்தவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டுவரை இந்த வழைமை செழிப்புடன் விளங்கி இருக்கிறது. உ.பி-யைச் சேர்ந்த முன்ஷி பிரேம்சந்த், உருது மொழியில் அற்புதமான புதினங்களை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படைத்தமைக்காக இன்றும் கொண்டாடப்படுகிறார். பிற்காலத்தில் அவர் இந்தியில் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் தான் உருதுவில் யோசித்து இந்தியில் எழுதி வந்ததாகவே குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவுக்கு உருதுவே அவர் மனத்துக்கு நெருக்கமான மொழியாக இருந்துள்ளது.

இதுதவிர இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதன்மையான வாசகமான, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ உருதுதான். 1921-ல் இந்த வாசகத்தை வடித்தவர் மவுலானா ஹஸ்ரத் மொஹானி. புரட்சியாளன் பகத்சிங்குக்கு விடுதலை உணர்வெழுச்சி ஊட்டிய வாசகம் இதுவன்றோ! இதேபோல், பிஸ்மில் அஜிமாபதி போன்ற விடுதலை போராட்ட கவிகள் பலர் உருது மொழியில் புரட்சிப் பாடல்கள் வடித்தனர். அவர்களுடன் ராம்பிரசாத் பிஸ்மில் போன்றோர் மதம் கடந்து கைகோத்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிச, மார்க்சிய சிந்தனையாளர்கள் பலரும் உருது மொழியில் தங்களது சித்தாந்தத்தை வார்த்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளில் பேசுவதில்லையே!

பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகே, உருது தேசிய மொழியாக அங்கு அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களிலும் 8 சதவீதத்தினர் மட்டுமே உருது பேசுவதாக தெரியவருகிறது. 48 சதவீதத்தினர் அங்கு பஞ்சாபி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். இதைவிடக் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் சவுதி அரேபியா, இராக், மொரக்கோ, ஈரான், தஜகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் உருது பேசப்படுவதே இல்லை. அங்கு அரபு மொழியே பிரதானமாக உள்ளது. ஏனென்றால், உருது இந்திய துணைக்கண்டத்தின் மொழி. இன்றும் உலக அளவில் உருது அதிகம் பேசுபவர்கள் இந்தியர்களே. அதுமட்டுமின்றி இந்தியையும் உருதுவையும் மொழி என்ற அளவுகோலிலும் பிரித்துப் பார்க்கவே முடியாது.

இத்துடன் நிறுத்திக் கொண்டால், நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் காட்டுவதாக ஆகிவிடும். மறுபக்கத்தையும் பார்த்துவிடுவோமே! சமஸ்கிருதம் குறித்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் நிலவும் மற்றொரு ’மாயை’தான் அது.

பவுத்தர்கள், இஸ்லாமியர்கள் கொண்டாடிய சமஸ்கிருதம்!

சமஸ்கிருதம், வேதங்களை ஏற்றுக் கொண்டவர்களின் மொழி. பிராமணியத்துக்கும் சாதியத்துக்கும் எதிராக இருப்பவர்கள் கடுமையாகச் சாட வேண்டிய மொழி. வெறும் பூஜை, புனஸ்காரத்துக்கு மட்டுமே பயன்படும் மொழி. அதற்கும் சாதிய அடுக்கில் கீழே தள்ளப்பட்டவர்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. தேவர்களின் மொழி என்று சொல்லிக்கொண்டு சாமானியர்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தும் மொழி. பிராமணியத்தைக் கேள்வி கேட்ட பவுத்தத்துக்கும் இந்து மதத்துக்கும் எதிரானவர்களாகப் புனையப்படும் இஸ்லாமியர்களுக்கும் சமஸ்கிருதம் எதிரி மொழி என்ற எண்ணம், இங்குக் காலங்காலமாக விதைக்கப்பட்டுவிட்டது. இந்த எண்ணத்தை முற்போக்காளர்களே அதிகம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மறுபுறம் மதவாதிகளும் திணித்துவிட்டார்கள். இந்த 2 தரப்பையும் அசைத்துப் பார்க்கும் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன.

பவுத்தத்தின் 2 பிரிவுகள் மாகாயானம் மற்றும் தேராவாதம். இவற்றில் மாகாயானத்தின் முக்கியப் புள்ளியாக மத்தியாமிக்கா கருதப்படுகிறது. புத்தரின் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் கழித்து வந்தவர் நாகார்ஜூனா. ஆந்திராவில் பிறந்தவர். அவருடைய நினைவாகத்தான் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜூனகொண்டா நகரம் உருவாக்கப்பட்டது. நாகார்ஜூனா சாகர் அணை உள்ளிட்டவை அவர் நினைவாக கட்டப்பட்டவையே. அந்த அணை நிர்மாணிக்கப்பட்ட பகுதிக்குக்கீழே இந்தியாவின் அரிய பவுத்த தடயங்கள் புதைந்து கிடக்கின்றன.

ஒரு காலத்தில் இங்கு, பல பவுத்த பல்கலைக்கழகங்களும் மடாலயங்களும் செயல்பட்டு வந்ததற்கான நிரூபணங்கள் தொல்லியலின் வழியாக தெரியவந்துள்ளக. இது ஒருபுறம் இருக்க, பவுத்த தத்துவ ஞானி நாகாரஜூனா பவுத்தத்தை எழுதிய மொழி என்ன தெரியுமா? சமஸ்கிருதம்.

இதேபோன்ற வேறொரு கற்பிதத்தை ஒரு புத்தகம் அடித்து நொறுக்குகிறது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே என்ற பெண், ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’(Culture of Encounters: Sanskrit at the Mughal Court) நூலை எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் இவை:

”இந்திய வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் முகலாயர்கள். அதேபோல, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தில் சமஸ்கிருத மொழிக்குத் தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இத்தகைய உண்மைகள் பாஜகவுக்கு அசவுகரியமாக இருக்கலாம். சமஸ்கிருதத்தின் ஒரு அங்கத்தை மட்டுமே தூக்கிப்பிடிக்கிறது பாஜக. இதிகாசங்கள், பண்டைய கவிதைகள் மட்டுமின்றி சமஸ்கிருத இலக்கியங்கள் எத்தனையோ உள்ளன. பாஜகவினர் சமஸ்கிருதத்தில் எழுதிய காளிதாசனை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதே சமஸ்கிருத மொழியில் முகலாயர்களைப் பற்றி 16, 17-ம் நூற்றாண்டில் சமணர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்வார்களா?

அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் உள்ளிட்டவர்களின் ஆட்சியில் சமஸ்கிருதம் ராஜ சபையில் கவுரவிக்கப்பட்டது. அதற்காகக் கொடுங்கோல் ஆட்சியாளராகக் கருதப்படும் அவுரங்கசீப் சமஸ்கிருதத்தை வெறுத்தார் என நினைத்துக்கொள்ளக்கூடாது.

வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்குத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான். அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் முக்கியத்துவம் இழந்தது உண்மைதான்.

ஆனால், அதற்கு 2 முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்திக்கு வழிவிட்டு மெதுவாகச் சமஸ்கிருதம் விடைபெற்றுச் செல்லத் தொடங்கிய காலம் 17-ம் நூற்றாண்டு. ஷாஜஹானின் ஆட்சிக் காலத்திலேயே இந்தி இலக்கியவாதிகள் முன்னிறுத்தப்பட்டு, சமஸ்கிருதம் மெல்ல நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் முற்றிலுமாகக் காணாமல்போனது ஒரு தற்செயல் நிகழ்வே.

இரண்டாவதாக, 1640 - 1650-களில் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களைச் சமஸ்கிருத மொழியில் பதிந்தவர் மன்னர் தாரா ஷிகவ். அவரை வீழ்த்திய பின்னரே, அரியணை ஏறினார் அவுரங்கசீப். ஆட்சி மாற்றத்தை நிறுவ சமஸ்கிருத மொழியினால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரத் தொடர்புகளை அவர் துண்டித்தார். ஆக, சமஸ்கிருத மொழியை முகலாயர்கள் கைவிடக் காரணம் அரசியலே அன்றி மதமோ, கலாச்சாரமோ அல்ல.

அன்று, முகலாயர்களுக்கும் பிராமணர்களுக்கும் பொதுவான மொழி இந்தியாக இருந்தது. ஒரு சமஸ்கிருத நூலை பாரசீகத்தில் மொழிபெயர்க்க வேண்டுமானால் முதலில் பிராமணர்கள் அதை வாசிப்பார்கள். வாய்மொழியாக இந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். அதைக் கேட்டுப் பாரசீகத்தில் முகலாயர்கள் எழுதிக்கொள்வார்கள்.

அதேபோல, சமணர்களும் பிராமணர்களும் முகலாயர்களுக்கு ஜோதிடம் கூறும் வழக்கம் இருந்தது. முகலாய ராஜ வம்சத்துக்கு பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் ஜாதகம் எழுதுவார்கள். மன்னர் ஜஹாங்கிருக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் ஜாதக தோஷம் நிவர்த்தி அடையச் சமணர்கள் பூஜை நடத்தியுள்ளனர்.”

இப்படி வேறு பல வரலாறுகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்பதை, இது போன்றவை புலப்படுத்துகின்றன. நம்மை நியாயப்படுத்திக் கொள்ள, தனித்துக்காட்ட, ஆள் சேர்க்க எப்போதுமே நமக்கு மற்றமை (Other) தேவைப்படுகிறது. அப்படிக் கட்டமைக்கப்பட்ட இரட்டை எதிர்நிலைகளில் (Binary Opposites) ஒன்று சமஸ்கிருதம் - இந்தி/ உருது மோதல்.

இந்தியாவின் மகிமையே அதன் பன்முகத்தன்மைதான். அத்தகைய செழுமை வாய்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் பலர் முயற்சிக்கத் தவறுவதால்தான் பாஜக வரலாற்றை மாற்றி எழுதத் துணிகிறது.

அரசியல் அதிகாரத்துக்கு ஆட்சி மொழியாகப் பிராந்திய மொழிகளைத் தூக்கி நிறுத்துவது குறித்து இங்கு பேசவில்லை. ஆனால், கண்ணை மூடிக்கொண்டு ஒரு மொழியை வெறுப்பது மடமை. அது வரலாற்று உண்மைகளை நாம் நெருங்க முடியாமல் செய்துவிடுகின்றது.

இந்தக் கட்டுரையை, “வரலாற்றைத் திரித்து எழுதினால் என்னவாகும்?” என்று ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’(Culture of Encounters: Sanskrit at the Mughal Court) புத்தகத்தின் நூலாசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதிலோடு முடித்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

“வரலாற்றைத் திரிப்பதும், சுருக்குவதும் அபாயகரமானது. முதலாவதாகச் சகிப்புத்தன்மை அற்றுப்போகும். ஏற்கெனவே இந்தச் சிக்கலை 21-ம் நூற்றாண்டு அனுபவித்துவருகிறது. அடுத்து, கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துகிறோம். இந்தியாவுக்கு அற்புதமான வரலாறு உள்ளது. ஈடு இணையற்ற இலக்கியச் செழுமை உள்ளது. ஆனால், குறுகலான பார்வை நமது ஞானக் கண்ணை மறைத்துவிடும். ஆங்கிலேயரின் காலத்தில்தான் (1757 முதல் 1947 வரை) முகலாயர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே முதன்முதலில் பிளவு ஏற்படுத்தப்பட்டது என்பது உங்களுடைய வாதம்.

தற்போது மோடி அரசாங்கம் அதே உத்தியைப் பிரயோகிக்கிறது…மிகவும் அபாயகரமான போக்கு இது. என்னைக் கேட்டால் இந்தியாவின் மகிமையே அதன் பன்முகத்தன்மைதான். அத்தகைய செழுமை வாய்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் பலர் முயற்சிக்கத் தவறுவதால்தான் பாஜக வரலாற்றை மாற்றி எழுதத் துணிகிறது”.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in