அரசியல் குருஷேத்திரக் களமாகும் கொங்கு... அண்ணாமலை வருகையால் ஆர்ப்பரிக்கும் பாஜக!

எடப்பாடியார் - ஸ்டாலின் - அண்ணாமலை
எடப்பாடியார் - ஸ்டாலின் - அண்ணாமலை

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பட்டியலில் தமிழகம் இருப்பதால் பிரச்சார அரசியல் இங்கே அதிகம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை குறிவைத்து அரசியல் கட்சிகள் கடும் கோதாவில் குதித்துள்ளன.

மும்முனைப் போருக்கு சங்கூதும் கொங்கு

கொங்கு மண்டலத்தை தனது பிரத்யேக வாக்குவங்கியாக பாவிக்கும் அதிமுக, இம்முறையும் அதனை தக்கவைக்கப் பார்க்கிறது. அவ்வாறு விடமாட்டோம் என அதனை உடைக்கும் முடிவில் ஆளும் திமுக காய் நகர்த்தி வருகிறது. இந்த இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் காலூன்றத் தவிக்கும் பாஜகவும், கொங்கு மண்டலத்தை பெரிதும் நம்பியிருக்கிறது. சொல்லப் போனால், இந்த மூன்று பிரதான கட்சிகளுக்கு இடையில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்ட குருஷேத்திரப் போர் மூண்டிருக்கிறது.

ஆனால், அரசியல்வாதிகளுக்கு கடுக்காய் கொடுப்பதில் கொங்கு மக்களின் குசும்பு அலாதியானது. 2019 மக்களவைத் தேர்தலில் நாடு நெடுக பரவலான மோடி அலை வீசியபோது தமிழகம் மட்டும் வேறாக வாக்களித்தது. அதே போன்று 2021 சட்டப் பேரவைத் தேர்தலில், மாநிலம் நெடுக வெற்றிகளை குவித்த திமுக, கோவை மாவட்டத்தில் மட்டும் பெருத்த அடி வாங்கியது அதிமுகவே பெருவாரியாக வென்றது. சந்தோஷப்பட்ட அதிமுகவினருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக, அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கொங்கு மக்கள் அமோக வெற்றியை வாரித் தந்தார்கள்.

போதாக்குறையாக, பாஜகவினருக்கும் கண்சிமிட்டி கொங்கு மண்டலம் வரவேற்பு வழங்கியதில், அவர்களும் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார்கள். இந்த 3 கட்சிகளுமே இம்முறை வெற்றி எங்களுக்குத்தான் என்று வெளியே மிதப்பு காட்டினாலும், உள்ளூர உதைப்புடனே கொங்கு மண்டலத்தில் வலம் வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆஸ்தான வாக்குகள் அதிமுகவை காப்பாற்றுமா?

கட்சியில் ஒற்றைத் தலைமையை நிரூபித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மக்களவைத் தேர்தல் வாயிலாக தம் கட்சியினருக்கு தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார். கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பினும், கொங்கு மண்டலத்திலேனும் அதிமுகவுக்கான ஆஸ்தான வாக்குகள் கரை சேர்க்கும் என நம்புகிறார் அவர். தான் மட்டுமன்றி தனது ’மணி’யான சகாக்கள், அவர்கள் வாரியிறைக்க விருக்கும் ’மணி’யான செயல்பாடுகளும் வெற்றியை சாதிக்கும் என நம்பியிருக்கிறார்.

இன்னொரு ஜெயலலிதாவாக தன்னை முன்னிறுத்தும் எடப்பாடியார், அதே பாணியில் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், வேட்பாளர்களை நிறுத்துவதிலும் தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறார். 3 பிரதான கட்சிகளில்,` பெரும் கூட்டணி பலமின்றி தேர்தலை சந்திப்பது அதிமுக மட்டுமே. இந்த தேர்தலில் கணிசமான வெற்றியையும், வழக்கமான வாக்கு வங்கியையும் தக்கவைத்துக்கொண்டால், அதிமுக தொண்டர்கள் அடுத்த அம்மாவாக அய்யாவை கொண்டாடத் தயாராவார்கள்.

அப்படி இல்லாமல் தேர்தல் முடிவுகளில் அதிமுக பிசகினால், அதிருப்தி அலை கட்சியின் அடிமட்டத்திலிருந்தே தலைதூக்கும். அவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எடப்பாடியார் கனவுகளுக்கு உலை வைக்கும். எனவே தனது தலையை காக்கும் என்ற அக்கறையிலும் கொங்கு மண்டலத்தை எடப்பாடியார் நம்பியிருக்கிறார்.

திகுதிகு திமுக

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உறுதியானதில், அதனை உடைக்கும் சித்தமாய் செந்தில் பாலாஜியை களமிறக்கியது திமுக. கட்சி தலைமை பெருமிதப்படும் வகையில் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளும் இருந்தன. திமுகவினர் உத்வேகம் பெறும்வேளையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி சிறைக்குள் முடக்கப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அடுத்தபடியாக அமைச்சர் உதயநிதி களமிறங்கினார். அவர் பார்வையில் வியர்வை சிந்தினால் புரமோஷன் நிச்சயம் என கட்சி நிர்வாகிகள் விழுந்தடித்து வேலை பார்த்தார்கள். ஆனபோதும் செந்தில் பாலாஜியின் வியூகமும், நாசூக்கும் சின்னவருக்கு இன்னமும் சித்தமாகவில்லை. போதாக்குறையாக மூன்றாம் திசையிலிருந்து பாஜகவின் அண்ணாமலையும் கோவையில் குதித்திருப்பதால் திமுகவுக்கு இரட்டை சுமை சேர்ந்திருக்கிறது.

இந்த போதும் இம்முறை தனது பலத்தை நிரூபித்துக் காட்ட கொங்கு மண்டலத்தில் கூட்டணிக் கட்சிகளை ஓரேயடியாக ஒதுக்கிவைத்து விட்டு அனைத்திலும் தானே போட்டியிடுகிறது திமுக. இந்தப் பகுதியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிக்கு வழி கொடுத்துவிட்டால் அதுவும் தங்களுக்குத் தான் சிக்கல் என்ற திமுகவின் தொலைநோக்கு சிந்தனையும் இதற்குள் இருக்கிறது.

28 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கோவையில் நேரடி போட்டியில் குதித்திருக்கிறது திமுக. கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக்கொடி நாட்டினால், அது மாநிலம் முழுமைக்குமே திமுகவினருக்கு உத்வேகம் அளிக்கும். சட்டப்பேரவை தேர்தலுக்கு மேலும் உற்சாகத்துடன் கட்சியினர் களமிறங்க அது உதவும்.

சிறைவாசத்தில் செந்தில் பாலாஜி
சிறைவாசத்தில் செந்தில் பாலாஜி

பாஜக கணக்குகள் பலிக்குமா?

சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் நின்று தோற்ற அண்ணாமலை, எந்த நம்பிக்கையில் மக்களவைத் தேர்தலில் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது பாஜக அபிமானிகளுக்கே பெரும் கேள்வியாக நெருடுகிறது. ஆனால், மேலிடத்திலிருந்து கிடைத்த ஊட்டமான சேதிகளால், அண்ணாமலைக்கு அப்பாலும் வெற்றியை பெற்றாகும் திடத்துடன் பாஜகவினர் உந்தப்பட்டு வருகின்றனர். நீலகிரி தொகுதியில் நிறுத்தினால் ஜெயிக்க வாய்ப்பில்லை என்பதால் தான் மத்திய அமைச்சர் எல்.முருகனை ராஜ்யசபாவுக்கு வேட்பு மனு போட வைத்தது பாஜக. ஆனால் இப்போது, அந்த முடிவை மாற்றி எல்.முருகனையே மீண்டும் நீலகிரிக்கு மாற்றி இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தின் மீது பாஜகவுக்கு அந்தளவுக்கான அதீத நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது.

தேர்தல் நெருக்கத்தில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து 6 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, பல்லடம் பொதுக்கூட்டம், கோவை ரோடு ஷோ என கோவை மாவட்டத்துக்கு மட்டுமே இருமுறை வந்தார். பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து சேலம் கூட்டத்தில் பேசினார். தமிழகத்தின் தெற்குக்கு அப்பால் மேற்கில் தங்களுக்கான விடியல் இருப்பதாக பாஜக தீவிரமாக நம்புகிறது. இரு திசையிலும் கிடைக்கும் வெற்றியையும் அதையொட்டிய கட்சியின எழுச்சியையும் முதலீடாக்கி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் முன்னேற திட்டமிட்டிருக்கிறது.

கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
கோவையில் மோடியின் ரோடு ஷோ- உடன் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

இவற்றை முன்னிட்டே நாட்டில் எங்குமே இல்லாத வியூகத்தை, பாஜக தமிழகத்தில் கையாண்டு வருகிறது. மோடியின் பிரதாபங்கள், ஆட்சியின் சாதனைகள், ராமர் கோயில், சிஏஏ என்று எதையும் முன்வைக்காது, திமுகவை திட்டுவதையும், அதிமுக மறைந்த தலைவர்களின் புகழ்பாடுவதுமான விநோதங்களை மோடியே அரங்கேற்றினார். கூடுதல் திட்டமாக ’மோடி ரோடு ஷோ’-வும் நடத்தினார்கள்.

கோவை குண்டுவெடிப்புக்குப் பின்னரே அங்கே பாஜகவுக்கான வாக்கு வங்கி அதிகரித்தது. இதன் மூலமான பெரும்பான்மைவாத அரசியல் வியூகத்தை பாஜக பெரிதும் நம்புகிறது. எனவேதான் ரோடு ஷோ வரிசையில், குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவதையும் பலத்த விமர்சனங்களுக்கு இடையே நிகழ்ச்சி நிரலில் பாஜகவினர் புகுத்தினர். மோடியின் பேச்சும் அதன் போக்கிலேயே அமைந்தது.

திமுக - அதிமுக கட்சியினர் மத்தியில் தாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்கு இணையாக, கொங்கு மண்டலத்தில் பாஜக எழுந்துவிடக்கூடாது என்பதிலும் கூடுதல் சுதாரிப்பாக இருக்கின்றனர். இத்தனை சவால்களுக்கு மத்தியில் கொங்கு மண்டலத்தில் பாஜக ஓரிரு தொகுதியில் ஜெயித்தாலும், மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதைவிட கூடுதல் மகிழ்வோடு தமிழக பாஜகவினர் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in