அடுத்த விக்கெட் அண்ணாமலையா... அமர் பிரசாத் ரெட்டியா?

வார் ரூம் களேபரமும்... மாரிதாஸ் போர்க்கோலமும்!
அமர் பிரசாத் - அண்ணாமலை
அமர் பிரசாத் - அண்ணாமலை

ஆத்ம நண்பர் அதானியால் பிரதமர் மோடி கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையின் ஆதி தொட்டு அரவணைத்து வந்த அதானியை விட்டுத்தரவும் முடியாது, விலக்கவும் முடியாது தவித்து வருகிறார் மோடி. தனது தானைத் தலைவர் மோடியை முன்மாதிரியாகக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வரும் பாஜக தமிழகத் தலைவரான அண்ணாமலைக்கும் அதே நெருக்கடி நேர்ந்துள்ளது.

மோடிக்கான அதானியும், அமித் ஷாவும் கலந்த எதிரொலிப்பாக, அண்ணாமலைக்கு அனைத்துமாக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டியால், தலைவர் அண்ணாமலையும் தமிழக பாஜகவும் தடுமாற்றம் கண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலையின் வலது, இடது கரங்களாக செயல்படும் அமர் பிரசாத் ரெட்டி யார், அவரது அரசியல் மற்றும் அதிகார லீலைகள் எப்படியானது, அண்ணாமலையால் அவரை ஏன் தவிர்க்க முடியவில்லை, அண்ணாமலையின் எதிர்ப்பாளர்கள் மட்டுமன்றி தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் ஏன் அமர் பிரசாத்துக்கு எதிராக வரிந்துகட்டுகிறார்கள், தமிழக பாஜகவின் நடப்பு போக்கு எங்கே சென்று முடியும்... என்பதான கேள்விகள், ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பின் மத்தியிலும் தமிழக அரசியலை ஆக்கிரமித்துள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

சந்தி சிரித்த கமலாலய நந்தி

திருச்சி சூர்யா சிவா, காய்த்ரி ரகுராம் என கட்சியை விட்டு விலக்கப்பட்டவர்கள் முதல் மீஞ்சூர் சலீம் போன்று கட்சிக்கு உள்ளிருப்பவர்கள் வரை பலரும் பகிரங்கமாகவே அமர் பிரசாத்துக்கு எதிராக கொதிக்கிறார்கள். அரசியல் அனுபவமிக்க பொன்னார், நயினார் முதல் வளர்ந்து வரும் எல்.முருகன் வரை பாஜகவின் தமிழகத் தலைவர்கள் பலரும் கமலாலயத்து நந்தியான அமர் பிரசாத் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

கட்டம்கட்டப்பட்ட கே.டி.ராகவன் போன்றோர் முதல் அரசியல் கட்டங்களின் காய்களை சராமாரியாய் நகர்த்தி வந்த ஆடிட்டர் குருமூர்த்தி வரை இதர சிலரையும் இதே நந்தி உறுத்தி வருகிறது. இவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக, பாஜக ஆதரவு யூட்யூபரும், வலதுசாரி லாபியிஸ்டுமான மாரிதாஸ், அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு அமர் பிரசாத் ரெட்டியை பகிரங்கமாய் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

வழக்கமாக திமுக தலைமைக்கு எதிராகவும், இந்துத்துவ மற்றும் பாஜக ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் மாரிதாஸ், தமிழக பாஜக தலைமையின் சகலமுமாக வலம் வரும் அமர் பிரசாத் ரெட்டியை அம்பலப்படுத்தி இருப்பது பொதுவெளியில் பலவாறாக அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வரும் பாஜகவையும் அதன் தலைமையையும் பதம் பார்க்கும் வகையில் மாரிதாஸ் பொங்கியிருப்பது, கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று சிலர் புலம்புகிறார்கள். ஆனால் பெருவாரியானோர், “பாஜகவினரின் மனசாட்சியாக மாரிதாஸ் குரல் எழுப்பியிருக்கிறார், இம்மாதிரியான சுய விமர்சனங்களும், சுட்டிக்காட்டல்களும் கட்சியின் வளர்ச்சிக்கு உதவவே செய்யும்” என்கிறார்கள்.

பிரதமர் மோடி உடன் அமர் பிரசாத் ரெட்டி
பிரதமர் மோடி உடன் அமர் பிரசாத் ரெட்டி

வார் ரூம் அக்கப்போர்

அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படை தமிழக பாஜகவின் ’வார் ரூம்’ அறைகளில் இருந்தே தொடங்கியது. நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, பொதுவாழ்க்கையில் பிரபலத்தை விரும்புவோரும், அதனை வளர்த்து தக்கவைத்துக்கொள்வோரும் ஆர்ப்பாட்டமின்றி வார் ரூம் பாவிக்கவே செய்கிறார்கள். உச்ச நடிகர்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்களை ஆராதிப்பது, அப்டேட்டுகளை பரப்புவது, எதிர் நடிகர் முகாமை சமூக ஊடகங்களில் தாக்குவது உள்ளிட்ட உத்திகளை நட்சத்திரங்களுக்கான வார் ரூம் அடிபொடிகள் பார்த்துக்கொள்கிறார்கள். ரசிகர்களின் துடிப்பை வணிகமாக்கவும், அரசியல் கனவுக்கு அடித்தளமிடவும் விரும்பும் நட்சத்திரங்கள் இதற்காக பெரிதாய் செலவழிக்கவும் செய்கிறார்கள்.

இவர்களுக்கு அப்பால் அரசியல்வாதிகள் தங்களது உட்கட்சி மற்றும் எதிர்கட்சி எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி தரவும், அவர்கள் மீது சேற்றை வாரியிறைக்கவும், தங்கள் பிம்பத்தை சதா வெளிச்சத்தில் நீந்தச் செய்யவும், பிரமுகரின் சகல நகர்வுகளையும் பெரிதுபடுத்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக்குவார்கள். பிரதமர் மோடி முதல் தமிழக அமைச்சர் உதயநிதி வரை இதற்கெனத் தனிக்குழுக்கள் கமுக்கமாய் செயல்பட்டும் வருகின்றன. ஆனால், பாஜகவின் சார்பில் கூடிய வார் ரூம் தங்கள் இருப்பையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக பறைசாற்றியதன் பின்னணியில் இருந்த உள்நோக்கமே, தற்போதைய அக்கப்போர்களுக்கு காரணமாகி இருக்கிறது.

அமித் ஷா உடன் அமர்
அமித் ஷா உடன் அமர்

சதுரங்க வேட்டை ரெட்டி

பாஜக சார்பில் அமைக்கப்பட்ட அடையாறு வார் ரூம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்களை விதந்தோதவும், மோடி முதல் அண்ணாமலை வரையிலான தலைவர்களின் புகழ்பாடலையும் மட்டுமே செய்திருப்பின் இந்தளவுக்கு விவகாரம் சந்தி சிரித்திருக்காது. குறிப்பிட்ட சிலரை குறிவைத்து தரம் தாழ்ந்து தாக்குவது முதல் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானபோது, பாஜக டெல்லி தலைமைக்கு புகார் கணைகள் பறந்தன.

மாரிதாஸ் வீடியோ 1
மாரிதாஸ் வீடியோ 1

அரசியல் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவதன் பெயரில் உண்டியல் குலுக்குவது முதல் ரசீதுடன் நன்கொடை பெறுவது வரை அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வசூலிப்பது சாதாரணமாக நடப்பது. இது மக்களுக்கான அரசியல் நிகழ்வில் அவர்களையும் பங்கேற்பாளர்களாக்கும் உத்தியும் கூட. ஆனால், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை முன்வைத்து, பெரும் தொழிலதிபர்களிடம் பெருந்தொகை பெறப்பட்டதாக வார் ரூம் செயல்பாடுகளுக்கு எதிராக மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுவெளியில் குற்றம் சாட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது.

பாஜகவை சேர்ந்த பலரும் தங்களுக்குள் இதை விவாதிக்க ஆரம்பித்தனர். எல்லோரின் விரல்களும் அண்ணாமலைக்கு எல்லாமுமான அமர் பிரசாத் ரெட்டியை நோக்கியே நீண்டது. போதாக்குறையாக சுரனா குழுமம், ஆருத்ரா கோல்ட் என வங்கியிலும், மக்கள் மத்தியிலும் பல்லாயிரம் கோடி மோசடி செய்தவர்கள் பலரும் அமர் வாயிலாக பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள். எல்லாவற்றையும் மாரிதாஸ் பொதுவில் போட்டுடைத்தார். மாரிதாஸ் போர்க்கோலம் பூண்டதன் பின்னணியில், பாஜகவில் அவருக்கான ராஜ்யசபா எம்பி பதவி முதல் கட்சியின் உச்ச பொறுப்புகள் வரை எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனதே காரணம் என்று சொல்லப்பட்டபோதும், காயத்ரி ரகுராம் விவகராமே மாரிதாஸை வெடிக்கச் செய்தது.

மாரிதாஸ் வீடியோ 2
மாரிதாஸ் வீடியோ 2

தரம் தாழ்ந்த வார் ரூம்

குஷ்பூ அளவுக்குக்கூட அரசியல் அனுபவம் பெறாத காய்த்ரி ரகுராமால், தான் பாஜகவில் இருந்து கட்டம்கட்டப்பட்டதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனவே, சதா அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரிலும், யூடியூப் பேட்டிகளிலும் சீற ஆரம்பித்தார். அரசியல் கணக்குகள், பிரதிபலன் எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற அவரது சீற்றம் அண்ணாமலையின் பிம்பத்தை தொடர்ந்து சேதம் செய்தது. பதிலடியின் பெயரில் அண்ணாமலையின் துதிபாடிகளில் சிலர் காய்த்ரியின் ஆபாச மார்பிங் புகைப்படங்களை பொதுவில் பரப்ப, சகலரும் முகம் சுளித்தனர். இதை முன்வைத்தே வார் ரூம் நோக்கத்தை மாரிதாஸ் கேள்வியாக்கினார்.

இதற்கு பேட்டியொன்றில் கெத்தாக பதிலளித்த அமர் பிரசாத் ரெட்டி, “அவர் முதலில் பாஜகவில் சேரட்டும்; பிறகு கேள்வி கேட்கட்டும்” என்றதும், மாரிதாஸ் போர்க்கோலம் பூண்டார். ‘வார் ரூம் ரெட்டி. பெருச்சாளிகள் மீது கவனம் தேவை’, ’ரெட்டியின் சதுரங்க வேட்டை. இதுவரை வெளியாகாத தகவல்கள்’ என்று 2 வீடியோக்கள் வெளியிட்டார். தனக்கே உரிய பாணியில் அமர் பிரசாத் ரெட்டியை உண்டு இல்லையென செய்தார். அமருக்கு வைத்த குறி மறைமுகமாக அண்ணாமலையை தாக்கும் என்பதையும் மாரிதாஸ் அறியாதவரல்ல.

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

அண்ணாமலையின் அடடே அஜண்டா?

மாரிதாஸ் மட்டுமல்ல, இன்றளவும் அண்ணாமலை புகழ்பாடும் திருச்சி சூர்யா, பாஜகவில் தான் அரசியல் காவுக்கு ஆளானதற்கு அமர் பிரசாத் ரெட்டியே காரணம் என்கிறார். கே.டி.ராகவன் முதல் காயத்ரி ரகுராம் வரை கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் அமர் நோக்கியே விரல் நீட்டுகிறார்கள். ஹனி ட்ராப் வீடியோ, ஆடியோக்கள் முதல் ஆர்டிஐ தகவல் அடிப்படையில் மிரட்டி வசூல் நடத்துவது வரை அமர் மீதான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அறியாது இருப்பாரா?

உண்மையில் இப்படியான ஒருவரே வளரும் அரசியல்வாதி ஒருவரின் வளர்ச்சிக்கு ஆகமுடிந்தவற்றை செய்ய முடியும். பல அரசியல் பிரபலங்களின் அந்தரங்க பின்புலத்தை தோண்டினால் இப்படி பல அமர்கள் அமர்ந்திருப்பார்கள். இங்கே சற்று வெளிப்படையாகவே வலம் வந்திருக்கிறார் அமர். அது அவரது பாணியாகவோ தேவையாகவோ இருந்திருக்கலாம். ஆனால், சேதாராம் பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் சேர்ந்திருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

சாதாரண நாளிலேயே தமிழக அரசியல் களத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் நிற்காது பெங்களூருக்கும் இலங்கைக்கும் இடம் பெயர்வதன் பின்னணியில், அமர் உள்ளிட்ட அண்ணாமலைக்கு எதிரான புகார்களே காரணம் என்கிறார்கள். விரைவில் அண்ணாமலைக்கு மாற்றாக தலைவர் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தமிழக பாஜகவில் பேச்சு அடிபடுகிறது. நிதர்சனத்தில் சற்றும் சாத்தியம் இல்லாதவை என்ற போதும், அண்ணாமலைக்கு எதிரான அதிருப்தி அடுத்தகட்டத்தை எட்டியிருப்பதையே இவை காட்டுகின்றன.

இதே கோணத்தில் அண்ணாமலையின் வார் ரூம் நோக்கம், பாஜகவை கடந்ததாகவும் அண்ணாமலையை மையமாக்கியும் பார்க்கப்படுகிறது. தனக்கான அரசியல் தொடர்புகள் மற்றும் மக்கள் அபிமானத்தை வளர்த்துக்கொள்ளவும், பிற்பாடு அவசியமெனில் தனிக்கட்சி தொடங்குவதற்கும் உதவும் வகையிலே வார் ரூம் செயல்பாடுகளை முடுக்கி விடுவதாகவும், அதற்குத் தோதாக அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்களே சரிப்படுவார்கள் என்றும், அவரை அண்ணாமலை அரவணைத்து வருவதாகவும் பாஜகவில் புலம்புகிறார்கள்.

பாஜகவையும் கட்சியின் இதர தலைவர்களையும் பின்தள்ளி அண்ணாமலையின் புகழே அதிகம் பாடப்படுவதையும், லாபமோ நட்டமோ மாநில அரசியல் தன்னை மையமாக்கி சுழல்வதையே அண்ணாமலை எதிர்பார்ப்பதையும் இதற்கு சாட்சியாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழகத்தில் அண்ணாமலை குறிவைத்திருக்கும் அரசியல் வெற்றிடத்துக்கு தகுதியாக தன்னை வளர்த்துக்கொள்வதையும், அதற்காக அமர் பிரசாத் போன்றவர்களை நம்புவதையும் இதன் பின்னணியில் இருந்தே பார்க்கிறார்கள்.

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

இப்போதைக்கு இடைவேளை

அண்ணாமலைக்கு எதிர்திசையில் ஆவேசம் காட்டிய மாரிதாஸும் திடீரென அமைதியானார். ‘நல்லவர்கள் மற்றும் பெரியவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமர் பிரசாத்துக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக’ச் சொல்லி இப்போதைக்கு இடைவேளை விட்டிருக்கிறார். அந்தப் பெரியவர் அநேகமாக ஆடிட்டர் குருமூர்த்தியாக இருக்கும் என்றும், தனது பிடியை மீறி தமிழக பாஜகவை அண்ணாமலை செலுத்துவதை ரசிக்காது எதிர் லாபி செய்கிறார் என்றும் பாஜகவினர் பகிரங்கமாகவே பதிவிட்டு வருகிறார்கள்.

வார் ரூமும் போர்ப்பரணியை அடக்கி வாசித்து வருகிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் சரிந்ததன் பின்னணியில் அதன் உட்கட்சி மோதல்களே காரணம் என்பது ஊரறிந்தது. இன்றைக்கும் அந்த தடுமாற்றங்களில் இருந்து மீள வழியின்றி காங்கிரஸ் தவிக்கிறது. காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கிளம்பிய பாஜகவினரும் இப்படி அதே பாதையில் செல்வதுதான், எதிர்பார்ப்புகளை வளர்த்திருந்த கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை நோகடித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in