அரசியல் கதைகள் 04: வாக்கு தவறலாமா?

அரசியல்வாதி - சித்தரிப்புக்கானது
அரசியல்வாதி - சித்தரிப்புக்கானது

கண்ணபிரானுக்கு உணர்ச்சிவசப்பட்டால் உதடு துடிக்கும். இம்முறை கோபத்தால் துடித்தது. ”வாக்கு தவறலாமா ராமஜெயம்..?” என்று கடுகடுத்தார் கண்ணபிரான். அந்த ராமஜெயம் கலங்கிப் போயிருந்தார்.

அன்றைய தினம் காலையிலேயே எம்எல்ஏ கண்ணபிரானுக்கு ஏழரை கூடியிருந்தது. விடிந்ததுமே பஞ்சாயத்தா என்று வெறுத்துப் போனார். அதுமட்டுமன்றி அவருக்கு அன்றைய தினம் தனிப்பட்ட வேலைகளும் இருந்தன.

கண்ணபிரான் அந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்எல்ஏ ஆனவர். மேலும் தனது சாதியின் அறிவிக்கப்படாத தலைவராகவும் இருக்கிறார். அதனால் பெரும்பாலும் சாதிக்குள் எழும் சச்சரவுகள், அவரைக் கேட்காமலேயே கதவைத் தட்டும்.

ராமஜெயம் பெண்ணைப் பெற்றவர். சாதி வழக்கப்படி ஏகப்பட்ட வரதட்சணை சீர் செனத்தி என விமரிசையாக மகள் திருமணத்தை முடிக்க விரும்பினார். அப்படியே கண்ணபிரான் முன்னிலையில், மாப்பிள்ளை வீட்டாருக்கு வாக்கும் கொடுத்திருந்தார். ஆனால் இடையில் கரோனா வந்து அவரது தொழிலை கவிழ்த்துப்போட்டதில் எக்கச்சக்கமாய் நஷ்டமானார். மாப்பிள்ளைக்கான சீரில் காரும் இன்னுமொரு பெருந்தொகையும் நிலுவையாக நிற்கிறது.

பல முறை கேட்டுப்பார்த்த சம்பந்தி வீட்டார், கண்ணபிரான் முன்னிலையில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர். “வாக்கு கொடுத்திட்டு இப்போ இழுத்தடிக்கிறது ரொம்ப தப்பு ராமஜெயம். வாக்கு தவறினா நம்ம குலத்துக்கே இழுக்கு. வாக்கு மீறினா எனக்கும் பிடிக்காது. உன் சொத்தை வித்தாவது, கொடுத்த வாக்கை காப்பாத்துற வழியப் பாரு” என்று பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் தனது தொகுதியின் இன்னொரு மூலையில் இருந்தார் கண்ணபிரான். அங்கே நிலபேரம் ஒன்று பெருந்தொகையில் படிய இருந்தது. விவரம் வெளியாருக்கு கசியக் கூடாது என்பதற்காக, டிரைவரை தவிர்த்துவிட்டு தனியாக கார் எடுத்துக் கிளம்பினார். எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது எங்கோ வழிமாறி வந்ததை தாமதமாகவே உணர்ந்தார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் பயணப்பட்ட அனுபவத்தில் அதுவும் தனது தொகுதிதான் என்பதை மட்டும் உணர்ந்தார்.

ஆனபோதும் அந்த சாலையில் பயணிப்பது நரகமாக இருந்தது. நாட்டில் இப்படியும் சாலைகள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டார். சொகுசுக் கார் என்ற போதும் வெகுவாய் முதுகை பதம் பார்த்தது. ஓரிடத்தில் காரை நிறுத்தி, செல்லும் வழி சரிதானா என விசாரிக்க முயன்றார். அங்கிருந்த இளந்தாரி ஒருவன் துணிச்சலாய் ’நீங்க யாரு..’ என்று கேட்டான். கண்ணபிரான் மிதப்பாய் பதில் சொல்லி முடிப்பதற்குள் ஊருக்குள் எடுத்தான் ஓட்டம்.

எவரேனும் விவரமான பெரியவர்களை அழைத்து வரச் சென்றிருப்பான் என்று அலுப்போடு கண்ணபிரான் காத்திருந்தார். சில நிமிடங்களில் கிட்டத்தட்ட ஊரையே கூட்டி வந்து விட்டான். விரைந்து வந்தவர்கள் கண்ணபிரான் சுதாரிப்பதற்குள் அவரை வளைத்தனர்.

“பாவி மனுஷா. ஓட்டு கேட்டு வரும் ஒவ்வொரு தடவையும் சாலை வசதி பண்ணித் தரேன்னு சத்தியம் பண்ணுனியே. வாக்கு தவறின உன்னை என்ன பண்ணலாம்..” என்றபடி பாய்ந்தனர். கண்ணபிரானுக்கு உணர்ச்சிவசப்பட்டால் உதடு துடிக்கும். இம்முறை அச்சத்தில் துடித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in