
அன்றை தினம் கட்சியை விட்டு யார் விலகப் போகிறார்கள் என்பதே, தா.ஜ.க கட்சி அலுவலகத்தின் எல்லா மூலைகளிலும் கிசுகிசுப்பாக இருந்தது. ’இவரா இல்லை அவரா..’ என்று கட்சியை விட்டு விலகப்போகும் நிர்வாகிகள் குறித்தான வதந்திகள் விரவிக் கிடந்தன. அந்தளவுக்கு தா.ஜ.க கட்சியில் நேற்று வரை மாநிலத் தலைவர் சின்னத்தம்பிக்கு நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் பலரும், அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளுக்கொரு மாற்றுக் கட்சியில் அடைக்கலமாகி வருகிறார்கள்.
’தா.ஜ.க கட்சி இத்தோடு கரைகிறது; புதிய தலைவருக்கு திறமை போதாது; தலைவர் பதவிக்கு அடுத்தது யார்..’ என்றெல்லாம் ஊடகங்களில் விவாதங்கள் களைகட்டியிருந்தன. தற்போதைய தலைவர் சின்னத்தம்பி பொறுப்பேற்று ஓரிரு வருடங்கள்தான் ஆகிறது. இளம் வயது. அரசு உயர் பதவியில் இருந்தவர். அதிரடிக்கு பெயர் போனவர். திடீரென தேசப்பற்று பீறிட்டதில், அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்படி தேசியக் கட்சியில் ஐக்கியமானார். அடுத்த வருடமே அவரை மாநிலத் தலைவராக, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் டெல்லி தலைமை நியமித்தது .
அவரைக் கண்டு ஆரம்பத்தில் சகல கட்சிகளிலும் சலசலப்பு எழுந்தது. ’ஆயிரக்கணக்கிலான புத்தகங்களை எல்லாம் கரைத்துக் குடித்த அவர், என்ன செய்யப்போகிறார், எம்மாதிரியான அரசியல் வியூகம் எடுப்பார்..’ என்றெல்லாம் கவலைப்பட்டார்கள். ஆனால் ஆரம்ப ஜோர் தொடர்ந்து எடுபடவில்லை. கட்சிக்கு உள்ளாகவும் அதிருப்தி ஆரம்பித்ததில், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக கழன்றுபோய் இதர கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.
அன்றைய தினம் தா.ஜ.க நிர்வாகிகளில் மிச்சமிருப்போரும், காலியான இடங்களில் புதிதாக நியமிக்கப்பட்டோரும், தலைவர் சின்னத்தம்பியை சந்தித்து தங்களது இருப்பையும் விசுவாசத்தையும் மரியாதை நிமித்தம் உறுதி செய்துகொண்டிருந்தனர். எல்லோரும் போன பிறகு, தனது அறையில் அடிபொடியான பிரசாந்த் உடன் தலைவர் சின்னத்தம்பி தனித்திருந்தார். அவர்கள் எதிரிலிருந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தா.ஜ.க கட்சியையும், தலைவர் சின்னத்தம்பியையும் துவம்சம் செய்து கொண்டிருந்தனர்.
அனைத்தையும் சின்னத்தம்பி புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் கவலை எதுவுமில்லை. அவரது அடிபொடி பிரசாந்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் ஆறு மாதம் முன்பாக இன்னொரு கட்சியிலிருந்து தாவி வந்தவன். நேரடி அரசியலைவிட அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களின் முகக்குறிப்பு அறிந்து சேவகம் செய்வதில் விற்பன்னன். அவசியமெனில் நிழலான காரியங்கள் முதல் சொத்துக்கள் பரிமாற்றம் வரை முடித்துக்கொடுப்பதில் அனுவதஸ்தன். எனவே எப்பேர்பட்ட கட்சியானாலும் எளிதில் தலைமைக்கு நெருக்கமாகி விடுவான்.
அந்த பிரசாந்த் தற்போது குழம்பிப் போயிருந்தான். கடந்த சில நாட்களாக கட்சியில் நடப்பது எதுவுமே விளங்காது தவித்துப் போயிருந்தான். தலைவர் சின்னத்தம்பிக்கு எதிரான அதிருப்தி அதிகமானால், மேலிடம் அவரை பொறுப்பிலிருந்து நீக்கினால் தன் கதி என்னாவது பலமுறை அவரிடமே புலம்பியிருக்கிறான். அப்போதெல்லாம் தலைவர் சின்னத்தம்பி ஒரு தெய்வீகச் சிரிப்பை படரவிடுவார். இப்போதும்கூட அவன் மனதைப் படித்தவர் போல “கவலைப்படாதே பிரசாந்த். எனக்கோ என் பதவிக்கோ எதுவும் நடந்திடாது” என்று கண் சிமிட்டினார்.
பின்னர் சற்று குரல் தாழ்த்தியவராக “எல்லாமே நாடகம் பிரதர். மேலிடம் அனுமதியோடு இந்த அரசியல் ஆபரேஷனை ஆரம்பிச்சிருக்கிறேன். நோட்டா கூட போட்டி போட்டு கட்சியை வளர்த்தால், ஆட்சியை பிடிக்க இன்னும் அரை நூற்றாண்டு ஆகிடும். அதனால, எல்லா கட்சியிலேயும் நம்ம ஆட்களை ஊடுருவ விட்டிருக்கேன். ஆளும்கட்சி ஊழல் முதல் எதிர்க்கட்சியோட உள்ளடி களேபரங்கள் வரை எல்லா எதிர்முகாம்களின் ரகசியங்களும் என் கைக்கு ஈஸியா வந்திடும். அதுக்கு அப்புறம் சிபிஐ, அமலாக்கத்துறை அப்டின்னு அதிரடி கச்சேரி ஆரம்பிக்கும்” என்றபடி பகபகவென சிரித்தார் சின்னத்தம்பி.
பிரசாந்த் வாயடைத்துப் போனான். அவனது முகத்திலிருந்த குழப்ப ரேகைகள் மறைந்தன. தலைவர் சின்னத்தம்பி விடைபெற்றதும், அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிரசாந்த், வீட்டுக்குச் செல்லும் வழியில் ஆளரவமற்ற இடமாக பார்த்து காரை நிறுத்தினான். காருக்குள் ஒளித்து வைத்திருந்த செல்போனை உயிர்பித்து வாட்ஸ் ஆப் கால் செய்தான். எதிர்முனையில் கனைப்புக் குரல் கேட்டதும், “தலைவரே நீங்க சந்தேகப்பட்டது உண்மைதான். எல்லாமே செட்டப்பு. ஒரு கட்சி விடாம ஆட்களை ஊடுருவ விடுறாப்ல. சிபிஐ அது இதுன்னு பெரிசா திட்டமிருக்கு..” என்று இடைவெளி விட்டான். அரசியலில் பழம் தின்று கொட்டையிட்ட எதிர்முனை, பதில் பேசாது மற்றொரு கனைப்புடன் தொடர்பை துண்டித்தது.
## ##