
‘நடிப்பு வெடிப்பு’ நன்மாறன் பங்களா வரவேற்பறையில் நகம் கடித்து காத்திருந்தேன். நடிப்பு வெடிப்பு என்ற அடைமொழிக்குரிய நன்மாறன் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர். அவரது தந்தை ஒரு காலத்தில் இயக்குநராக இருந்தவர். தன்னுடைய தத்துபித்து இயக்கத்தில் மகனை ஒப்பேற்றியதில், எப்படியோ நடிப்பு வெடிப்பு நன்மாறன், தமிழ்கூறும் சினிமாவில் ஆழமாய் கால் ஊன்றி விட்டார். அந்த பிரபல்யத்தை அடிப்படையாக வைத்து அடுத்தபடியாக அரசியலில் குதிக்கவும், அவர் தரப்பில் திட்டமுண்டு. அதற்கேற்றவாறு கதைகளை கேட்டு வருவதாய் கேள்வியுற்று, நானும் இங்கே ஆஜராகி இருக்கிறேன்.
கோலிவுட்டில் எப்படியாவது முதல் படம் இயக்கிவிடும் ஆர்வத்தோடு அலையும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குநர்களில் நானும் ஒருவன். கடந்த வாரம் எனது குருநாதரான இயக்குநரிடம், என்னுடைய முதல் திரைப்படத்துக்கான கனவையும், கதையையும் சுருக்கமாக சொன்னேன். அமைதியாக செவிமெடுத்தவர், ”இது மாதிரியான கதையைத்தான் நன்மாறன் அப்பா தேடிட்டு இருக்கார். நான் சிபாரிசு பண்றேன்” என்றார். தடாலென குருவின் காலில் விழுந்தேன்.
”அதுல ஒரு பிரச்சினை...” என்று இழுத்தார் குருநாதர். ”நன்மாறன் அப்பா மறுபடியும் படம் இயக்கும் யோசனையில் இருக்கிறார். உன்னை மாதிரி கதை சொல்ல வர்ற புது இயக்குநர்களை மடக்கி, கதையை கொடுத்திடு.. நானே இயக்கறேன்னு அடம் பிடிக்கிறதா கேள்வி. ஜாக்கிரதை..” என்றும் எச்சரித்தே அனுப்பி வைத்தார். இதன் காரணமாக கூடுதல் பதற்றத்துடன் இங்கே காத்திருக்கிறேன்.
தனது அப்பாவுடன் பிரச்சன்னமான நன்மாறன், தன்போக்கில் செல்ஃபோனை நோண்ட, அவரது அப்பாதான் சிரத்தையாக கதை கேட்டார். விரிவாக சொல்லி முடித்தேன். ’இளம் நடிகன் ஒருவன் தனது தடாலடி நடவடிக்கைகளால் மக்கள் அபிமானத்தை வென்று, அரசியலில் குதித்து மாநில முதல்வராக முன்னேறுவதை’ நடைமுறை அரசியல் கலந்து கதையாக நெய்திருந்தேன். அதில், நன்மாறனின் அரசியல் கனவுக்கு ஏற்றவாறு சில சுவாரசியங்களையும் சேர்த்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே நன்மாறன் அப்பாவுக்கு ஏக திருப்தி. சட்டென்று பிளாங்க் செக் ஒன்றை கிழித்து என் கையில் திணித்தார். ’தம்பி உங்க கதை எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனால...’ என்று இழுத்தார்.
எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அதனை மறைத்துக்கொண்டு, “சாரி சார். என்னோட முதல் படத்துக்கான கதை இது. உங்க அளவுக்கு இல்லைன்னாலும், நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு எடுத்துக் காட்றேன் சார்..” என்று அழுத்தமாக சொன்னேன். அவர் வெடித்து சிரித்து விட்டார். ”தம்பி. நான் மறுபடியும் படம் இயக்க ஆசைப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனா அதைவிட நன்மாறனை அரசியல்ல இறக்கும் யோசனையா இருக்கேன். அந்த முயற்சிகளுக்கு நீங்க சொன்ன கதை தோதா இருக்கும்னு தோணுது..”என்று இளிப்போடு இடைவெளி விட்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாது விழித்தேன்.
“தம்பி, உங்க ஸ்க்ரிப்டை அடிப்படையா வச்சே படிப்படியா நன்மாறனை அரசியல்ல முன்னேத்தி தமிழ்நாட்டோட முதல்வரா ஆக்கிடலாம்னு தோணுது. அதனால் இந்த ஸ்கிரிப்டை நன்மாறன் அரசியலுக்காக அப்படியே கொடுத்திடுங்க. சினிமாவுக்கு வேற கதை பண்ணலாம்” என்றபோது அவர் வாயெல்லாம் பல்லாக இன்னும் இளித்தார்.