அரசியல் கதைகள் 01: ‘வார் ரூம்’ வண்டவாளம்!

வார் ரூம் -சித்தரிப்புக்கானது
வார் ரூம் -சித்தரிப்புக்கானது

நாதனுக்கு வயிறு கலங்கியது. வேலை எதுவுமே ஓடவில்லை. ’இந்த வேலையே இனி இல்லை என்றானதும் எப்படி அது ஓடும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

நடந்தது இதுதான்.

நாதன் வேலையில் சேர்ந்திருக்கும் அலுவலகம் என்பது உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கான ’வார் ரூம்’. இஞ்சினியரிங் படிப்பை முடித்து ஐடி பணிக்காக காத்திருந்த நாதன், அதையொட்டிய வேலை என்று கேள்விப்பட்டு இந்த வார் ரூம் பொறியில் விழுந்தான். ஐடி விங் என்ற பெயரில் அரசியல்வாதிகள் சிலர் இடும் பதிவுகளை உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாக்க வேண்டும். மேலும் வைரல் ஆவதற்கான கன்டென்டுகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். மற்றபடி நாதன் படித்த ஐடி படிப்புக்கும் இந்த வார் ரூம் ஐடி வேலைக்கும் கிஞ்சித்தும் தொடர்பு இல்லை.

அத்தோடு போனால் பரவாயில்லை. தினத்துக்கு இத்தனை பதிவுகளை வைரலாக்க வேண்டும் என்றெல்லாம் தனியாக டார்கெட் தந்திருந்தார்கள். தொழில்நுட்பம் சார்ந்த தன்னுடைய படிப்பு தவிர்த்து சுட்டுப்போட்டாலும் அரசியல் தகிடுதத்தங்கள் பிடிபடாத நாதன், அந்தக் கும்பலின் மத்தியில் தடுமாறிப்போனான்.

அதிலும் ’வார் ரூம்’ பாஸ் என்று விளிக்கப்படும் ராமர் ரெட்டி, சரியான டெரர் பேர்வழி. சற்று முன்னதாக அவர்தான் அலைபேசியில் அவனை அழைத்திருந்தார். ’வேலையில் சேர்ந்த இந்த 3 மாதங்களில் பெரிதாக வைரல் எதையும் சாதிக்கவில்லை என்பதால் இன்றோடு இந்த வேலையிலிருந்து உனக்கு கல்தா’ என்பதுதான் ராமர் ரெட்டி பேசியதன் சாரம். இந்த 2 வரித் தகவலை மட்டும் அவர் தெரிவித்திருந்தால் நாதன் அமைதியாக வெளியேறி இருப்பான். ராமர் ரெட்டி அரசியல்வாதியாயிற்றே; காதுகூசும் ஏகவசனத்தை கலந்து 12 நிமிடங்களுக்கு நாதனின் காது மடல்கள் சிவக்கும் அளவுக்கு கண்டபடி ஏசி வைத்திருந்தார்.

தனது கோபத்தினூடே ’வார் ரூம் என்ற பெயரில் தான் செய்யும் தகிடுதத்தங்கள், அதற்கு தோதான அரசியல் கோல்மால்கள்’ என தனிப்பட்ட பிரதாபங்களையும் ராமர் ரெட்டி பட்டியலிட்டிருந்தார். நிறைவாக, ’வேலையை விட்டு போவதற்கு முன்னர் முடிந்தால் உன்னை நிரூபிக்கும் வகையில் ஒரு வைரல் போஸ்டாவது பதிந்து விட்டுப் போ’ என்றும் அவர் சவால் விட்டிருந்தார்.

வார் ரூம் கண்றாவிகள் சகியாது, அங்கிருந்து வெளியேறுவது குறித்து ஏற்கனவே மனதளவில் நாதன் தயாராகி இருந்தான். அதனால் ராமர் ரெட்டி வெளியேறச் சொன்னதில் அவனுக்கு பெரிதாக வருத்தமில்லை. ஆனால், ’ஒரு வைரலாவது பதிவிட்டு உன்னை நிரூபித்துவிட்டு போ’ என்று ரெட்டி சவால் விட்டது, நாதனை வெகுவாய் சீண்டியிருந்தது. வெகுநேரம் சமூக ஊடகங்களில் குறுக்கும்நெடுக்குமாக உலவியபடி யோசித்துப் பார்த்தான். ஒன்றும் சிக்கவில்லை.

கிளம்புபோது சட்டென்று அந்த யோசனை தோன்றியது. அதன்படி ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவை உருவாக்கினான். அன்று நள்ளிரவு அனைத்து சமூக ஊடகங்களிலும் அது வைரலாகும்படி ஏற்பாடு செய்தான். அதன் பின்னர் மனம் ஆறியவனாக, அந்த வார் ரூம் விட்டு வெளியேறினான்.

அடுத்த நாள் பெரும் களேபரமாக பொழுது விடிந்தது. அதிரடியாக அந்த வார் ரூம் மூடுவிழா கண்டது. வார் ரூம் பொறுப்பாளியான ராமர் ரெட்டி வசமிருந்த கட்சியின் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. ‘வார் ரூம் வண்டவாளங்கள்’ என்ற தலைப்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் களைகட்டியிருந்தன.

அதிர்ச்சி கலையாத ரெட்டி ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடந்தார். அவரது அலைபேசியின் சமூக ஊடகங்கள் அனைத்திலும் நாதன் இட்டுச் சென்ற ஒற்றைப் பதிவு அதிரிபுதிரியாய் வைரலாகிக் கொண்டிருந்தது. ரெட்டியின் அனுபவத்தில் இதுபோல வைரல் கண்டதில்லை. நாதன் உடனான அலைபேசி உரையாடலில், வார் ரூம் பெருமிதங்களாக ராமர் ரெட்டி கோபத்தில் பேசியவை அனைத்தும் அந்த வைரல் பதிவுகளில் அப்பட்டமாக எதிரொலித்துக் கொண்டிருந்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in