வருண்; இன்னொரு இளைய காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்!

ராகுல் - வருண்
ராகுல் - வருண்

வருண் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என்ற குரல்கள் ஒன்றும் புதிதல்ல. உத்திரபிரதேச அரசியலை முன்வைத்தே முன்னதாக எழுந்த இந்த எதிர்பார்ப்புகள் தற்போது, உபிக்கு அப்பாலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் எழுச்சி மத்தியில், வருண் காந்தி குறித்த பேச்சுக்கள் மீண்டும் எழுந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகவே தெரிகிறது.

பாஜகவில் இருந்தவாறே கட்சிக்கும் கட்சித் தலைமைக்கு எதிராகவும் கலகக் குரல் எழுப்பி வரும் வருண் காந்தியின் போக்கும், அவ்வாறாக காங்கிரஸ் திசையை நோக்கியதாகவே தெரிகிறது. இதன் மத்தியில், 2024 மக்களவை தேர்தலை முன்வைத்து, காங்கிரஸ் புத்தெழுச்சி பெறுமா, அதற்கு அடித்தளம் இடும் வகையில் ராகுல் - வருண் இளம் காந்திகள் ஒன்று சேர்வார்களா எனக் காத்துக்கிடக்கிறது காங்கிரஸ் கட்சி.

‘காந்தி’களிடம் சரணடைந்த காங்கிரஸ்

‘காந்தி’ குடும்பத்தை விட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வேறு நாதியில்லை. காந்திகளுக்கு அப்பால் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் கட்சியில் இருந்தபோதும், வசீகரத் தலைமை இல்லாதது காங்கிரஸின் ஆகப்பெரும் குறையாக நீடிக்கிறது. ஆட்சி மற்றும் அதிகாரத்தை ருசிக்காது கலகலத்துப் போயிருக்கும் காங்கிரஸ், எப்பாடு பட்டாயினும் 2024 தேர்தலில் எழுந்து நின்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறது.

ராகுலின் பாதயாத்திரை அதற்கு வாசல் திறந்தாலும், போக வேண்டிய தூரமும் கடக்க வேண்டிய சவால்களும் அதன் பாதையில் ஏராளம் இருக்கின்றன. இதன் மத்தியிலிருந்தே இந்திரா காந்தியின் இன்னொரு பேரனான வருண் காந்தியின் வருகையையும் காங்கிரஸார் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். பாஜகவில் இருக்கும் வருண் காந்தி தரப்பிலிருந்தும் அண்மைக்காலமாக அதற்கான சமிக்ஞைகளும் வந்தபடியே இருக்கின்றன.

விலக்கம் கண்ட மேனகா

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஆக்டிங் பிரதமராகவே வலம் வந்தார் அவரது இளைய மகன் சஞ்செய் காந்தி. தாயின் துணிச்சலுக்கும், அரசியல் நுட்பத்துக்கும் சற்றும் குறையாதவர் சஞ்செய். இந்திரா அமல்படுத்திய முன்னுதாரண தேசநலன் திட்டங்கள் பலவற்றிலும் சஞ்செய் பின்னிருந்தார். அதுபோலவே எமர்ஜென்சி உள்ளிட்ட இந்திராவின் எதிர்மறை முடிவுகள் பலவற்றிலும் சஞ்செய் இருந்தார். மேனகா காந்தியை சஞ்செய் காதல் மனம் புரிந்ததில் பிறந்த வாரிசுக்கு, தனது மறைந்த கணவரின் நினைவாக பெரோஸ் வருண் காந்தி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் பாட்டி இந்திரா. வருண் பிறந்த 100-வது நாள் மர்ம விமான விபத்தில் தந்தை சஞ்செய் காந்தி பலியாக, இந்திரா குடும்பத்தில் எல்லாம் மாறியது.

1982, இந்திரா குடும்பத்திலிருந்து பிரியும் மேனகா - வருண்.
1982, இந்திரா குடும்பத்திலிருந்து பிரியும் மேனகா - வருண்.

அதன் பின்னரான இந்திரா படுகொலையால், சஞ்செய் அளவுக்கு அரசியல் அனுபவம் இல்லாத ராஜிவ் காந்தி பிரதமரானதும், இந்திரா குடும்பத்தோடு மேனகா இன்னும் விலக்கம் கண்டார். தோல்வி நிச்சயம் என்பதை அறிந்தும், ராஜிவ் காந்திக்கு எதிராக தேர்தலில் நிற்கும் அளவுக்கு மூர்க்கம் கொண்டார் மேனகா. பிற்பாடு சுயேச்சையாக அரசியல் களத்தில் வென்று, விபிசிங் தலைமையிலான ஜனதா தளத்திலும், பின்னர் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவிலும் முக்கிய இடம் வகித்தார். இந்த இடைவெளியில் சோனியா - மேனகா இடையே குடும்ப பூசல் பெரிதாக வெடித்திருந்தது. இது அரசியலிலும் எதிரொலித்ததில், தாய் மேனகாவை பின்பற்றி மகன் வருண் காந்தியும் சோனியா குடும்பம் மற்றும் அரசியலுக்கு எதிராக சிறுவயது முதலே கொம்பு சீவப்பட்டு வளர்ந்தார்.

மேனகா - வருண்
மேனகா - வருண்

வருண் வரலாற்று வெற்றி

லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மாணவனாக படிக்கச் சென்ற வருண் காந்தி மாணவர் சங்க தேர்தலிலும் வென்றார். சர்வதேச மாணவர்கள் பயிலும் அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிய பின்னணியில் வென்ற முதல் மாணவர் என்ற பெருமை வருணுக்கு சேர்ந்தபோது, மகன் ரத்தத்திலும் அரசியல் ஊறியிருப்பதை தாய் மேனகா உணர்ந்தார். தனக்கான தேர்தல் பிரச்சார களங்களுக்கும் வருணை அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். காந்தி குடும்பத்தாருடன் தீரா விசுவாசம் கொண்ட உபி வாக்காளர்கள் மேனகாவையும், வருணையும் அரவணைத்துக்கொண்டனர். சுயேச்சையாக நின்றது முதல் பாஜக அடைக்கலம் வரை மேனகாவை எம்பியாக்கி மகிழ்ந்தனர்.

ஆனால், 2009-ல் வருண் காந்தி பிலிபிட் தொகுதியில் வென்றபோது, சோனியா உட்பட காங்கிரஸ் கட்சி மொத்தமாக அதிர்ந்தது. வருணின் வெற்றி, சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் தாய் மேனகா உட்பட காந்தி வாரிசுகள் அனைவரின் தேர்தல் வெற்றி விகிதங்களையும் தூக்கிச் சாப்பிட்டது. 2 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து நின்ற எல்லோரையும் டெபாசிட் இழக்கச் செய்திருந்தார் வருண்.

பாஜகவின் கருவேப்பிலை

பாட்டி இந்திரா மற்றும் தந்தை சஞ்செய் ஆகியோரின் வேகமும் துடிப்பும் வருணிடம் இருப்பதைக் கண்டுகொண்ட மேனகா, பாஜகவில் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என கணித்தார். சோனியா குடும்பத்துடனான மோதலில் தனிக்கட்சி கண்ட அனுபவமும் மேனகாவுக்கு உண்டு என்பதால், காங்கிரசுக்கு எதிரான அரசியல் நோக்கில் வருணுக்கு பாஜக ராஜபாதை அளிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் நேரு, இந்திரா என்றாலே வேப்பங்காயாக நினைக்கும் பாஜக பெருந்தலைகள் சிலர், வருண் காந்தியை கருவேப்பிலையாக பயன்படுத்த முடிவு செய்தனர்.

ராஜ்நாத் சிங்கின் ஆசியுடன் கட்சியில் வளர்ந்த வருண் காந்திக்கு அப்போதுதான் தேசிய பொதுச்செயலர் பொறுப்பு தகைந்திருந்தது. 32 வயதில் கட்சியின் இளம் தேசிய பொதுச்செயலராக வரலாற்று சாதனையும் வருண் படைத்திருந்தார். மோடி - அமித்ஷா வருகையை அடுத்து, பொலிவிழந்த பாஜக தலைவர்களில் ராஜ்நாத் சிங்கும் சேர்ந்ததில், வருண் காந்தியின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. அவற்றை தாயும் மகனும் தாமதமாகவே கண்டுகொண்டார்கள்.

வாஜ்பாய் உடன் மேனகா, வருண்
வாஜ்பாய் உடன் மேனகா, வருண்

கலகக்குரலோன் வருண்

முன்னதாக மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்திய 2014 மக்களவை தேர்தலில், சோனியா குடும்பத்துக்கு எதிராக குரல் கொடுக்க மேனகா மற்றும் வருண் காந்தியை நன்றாகவே பாஜக பயன்படுத்திக்கொண்டது. வென்று ஆட்சியமைத்த பிறகு மேனகாவுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தபோதும், கட்சிக்குள் நாசூக்காக புறக்கணிக்கவே செய்தார்கள். 2019 தேர்தலில் பாஜக வென்றதும் மேனகா முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்டார். வருண் காந்தியின் அரசியல் எதிர்காலம் மொத்தமாக இருண்டது. இதற்கு வருண் காந்தியின் இயல்பான போக்கு பாஜகவை மிரளச் செய்ததும் ஒரு காரணமானது.

வருண் காந்தி
வருண் காந்தி

பாஜக தலைவர்களுக்கு மாற்றாக அவ்வப்போது வருணின் குரல் தனித்து ஒலிக்க ஆரம்பித்தது. கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி லோக்பால் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார் வருண். மியான்மர் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், ராணுவத்தின் அக்னிவீரர்கள் திட்டம் மற்றும் அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

அந்தக் குரலில் தனியார் நிறுவனங்களை அதிரடியாக அரசுடமையாக்கிய இந்திரா மற்றும் சஞ்செயின் குரலை காங்கிரஸார் கண்டுகொண்டனர். மோடியின் பத்து லட்சம் வேலைவாய்ப்பு உத்திரவாதத்தின்போது, ’அரசு துறைகளின் ஒரு கோடி காலிப்பணியிடங்களை முதலில் நிரப்புங்கள்’ என்று பகிரங்கமாக வருண் பதிவிட்டார். வருணின் இந்தக் கலகக்குரல்களை பாஜக தலைமை சற்றும் ரசிக்கவில்லை.

முன்மொழிந்த உபி காங்கிரஸார்

இதற்கிடையே வருணின் போக்கை ஊன்றிக் கவனித்த உபி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஆதரவுக் குரல்கள் எழ ஆரம்பித்தன. “வருண் தனது வேர்களுக்குத் திரும்ப வேண்டும். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உபி காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக வருண் காந்தியை காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் எதிர்பார்ப்புகளை கிளப்பினார்கள். அவர்களை சமாதானப்படுத்த, பொதுச்செயலர் பதவி வழங்கி பிரியங்கா காந்தி பொறுப்பில் உபியை ஒப்படைத்தது டெல்லி காங்கிரஸ்.

ஆனால், யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி வித்தைகளுக்கு மத்தியில் பிரியங்கா எடுபடவில்லை. இதனால் இடையில் ஓய்ந்திருந்த வருண் வரவேற்புக் குரல்கள் மீண்டும் தலைகாட்டுகின்றன. பாஜகவும் வருணின் கலகக்குரல் மற்றும் போர்க்கொடியை அவரது காங்கிரஸ் தாவலுக்கான அச்சாரமாகவே பார்க்கிறது. அரசியலை துறந்து முழுநேர விலங்கு ஆர்வலராக மாறியிருக்கும் மேனகாவுக்கும் வருணின் அரசியல் எதிர்காலம் குறித்த கவலைகள் படுத்தி வருகின்றன.

அடிபோடும் அண்ணன் - தம்பி?

ராகுல் காந்தி பாத யாத்திரை நெடுக பிரபலங்கள் பலரும் பங்கேற்க, மேற்கு உபி பயணத்தில் ராகுலுடன் வருண் காந்தியும் கைகோப்பார் என்ற எதிர்பார்ப்புகள் பெரிதாய் எழுந்தன. ஆனால், வருணின் காங்கிரஸ் கரிசனத்தை தடுத்தாட்கொண்ட அகிலேஷ் யாதவால், காங்கிரஸா - சமாஜ்வாதியா என்ற ஊசலாட்டம் வருண் காந்தியை அலைக்கழித்து வருகிறது. வருண் வரவை எதிர்பார்த்ததுபோல, மேற்கு உபியில் ராகுல் பேசிய பஞ்ச் வசனங்கள் பலவும் முன்னதாக பாஜக போக்குக்கு எதிராக வருண் காந்தி உதிர்த்தவை.

அதே போன்று டெல்லியில் பேசிய ராகுல் காந்தி, “வருண் வந்தால் ஆரத்தழுவிக் கொள்வேன்” என்று அதிரடித்தார். அதேசமயம், வருண் பாஜகவில் இருப்பதையும், அவரது ஆர்எஸ்எஸ் சித்தாந்த பின்னணி குறித்தும் கேள்வி எழுப்பினார். உடனே ஊடகங்களில், அண்மை ஆண்டுகளாக பாஜக தலைமையிடமிருந்து வருண் காந்தி விலகி நிற்பதையும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அவர் தலைமுழுகிவிட்டார் என்றும் அரசியல் கள நிலவரங்கள் வெளியாயின. இவற்றை எதிர்பார்த்தே ராகுல் அவ்வாறு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதயம் இனிக்குமா, கண்கள் பனிக்குமா

மூன்றாம் முறையாகவும் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் காங்கிரஸ் முழுதுமாக கரைந்து விடும் என்ற கவலை அதன் தலைவர்களை வெகுவாய் பீடித்திருக்கிறது. ராகுலின் தற்போதைய எழுச்சியோடு இரட்டைக்குழல் துப்பாக்கியாய் வருணும் இணைந்துகொண்டால், மோடி அலைக்கு எதிரான காங்கிரஸ் அலையை தாங்களும் உருவாக்கலாம் என்று நம்புகிறார்கள். அதற்கேற்ப அரசியல் களத்திலும் காட்சிகள் வேறாக மாறி வருகின்றன. அந்த மாற்றங்கள் குடும்பத்திலும் எதிரொலித்துள்ளன.

ஓய்வுக்காலத்தை எட்டிய சோனியா - மேனகா இருவரும் மகன்களின் முடிவில் தலையை நுழைக்காது இருக்கிறார்கள். உபி தேர்தல் களத்தை மையமாக்கி தனிப்பட்ட தாக்குதல் நடத்திய வருண் மீது அக்கா பிரியங்காவின் வருத்தம் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால், தம்பியை ஆரத்தழுவ அண்ணன் ராகுல் தயாராக இருக்கிறார்.

அகிலேஷ் யாதவ், வருண் மனதை கலைக்காது இருப்பின், ’காந்தி’ குடும்பத்தில் விரைவில் இதயம் இனிக்க கண்கள் பனிக்க அண்ணன் - தம்பி தோள் சேரக்கூடும். ஆனால், அது பாஜகவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக மாறுமா என்பதை அரசியல் களங்களின் வியூக நிதர்சனங்களே தீர்மானிக்கும். அண்ணன் - தம்பி இணைவது ஆட்சி மாற்றத்தை நல்குமோ இல்லையோ, கட்சிக்குள் மாற்றத்தை நிச்சயம் விளைவிக்கும் என்ற நம்பிக்கையிலும் ஜூனியர் சஞ்செய் காந்திக்காக காங்கிரஸார் காத்துள்ளனர்.

வருண் வருவாரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in