தமிழக மக்களைப் பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை: மின்கட்டண உயர்விற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரண்டு ஆண்டு காலம் கரோனாவால் மக்கள் பட்ட கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் தற்போது மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி, மங்கலம் வழியாக பொள்ளாச்சிக்கு இன்று சென்றார். அப்போது அவிநாசியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அவர், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது அதிமுக அரசு.. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது.

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால், இந்தத் திட்ட பணிகள் நிறைவேற்றப்படாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. திமுக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற முதியோர் உதவித் தொகையைக் கூட நிறுத்திவிட்டது. மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக அதிமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது மின்சாரம் எப்போது இருக்கும் என்றே தெரியவில்லை. வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் மின்கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு வருகிறது. ஆனாலும் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

கடந்த 2 ஆண்டு காலம் கரோனாவால் மக்கள் கஷ்டப்பட்டனர். ஆனால், அதனை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

மின் கட்டணம் உயர்வுக்கு ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இந்த மின் கட்டண உயர்வு அனைத்துப் பொருட்களின் விலை கணிசமாக உயர வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை வெகுவாக வாட்டி வதைக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் விடுதிகள் ஆகியவையும் இந்தக் கூடுதல் கட்டணத்தை மக்கள்மீது சுமத்தும்" என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "இந்தக் கட்டண உயர்வின் மூலம், 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதே போல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in