முக்குலத்தோர் வாக்கு வங்கி; பங்குபோடத் துடிக்கும் அரசியல் கட்சிகள்!

முக்குலத்தோர் வாக்கு வங்கி; பங்குபோடத் துடிக்கும் அரசியல் கட்சிகள்!

எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே என்று சொல்வதைப் போல கடந்த வாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் பசும்பொன் நோக்கியே இருந்தது. சிறு கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி பெரிய கட்சிகளின் தலைவர்கள் வரை முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்துவதை முக்கிய கடமையாக நினைத்தார்கள். காரணம், அந்த சமூகத்தின் கணிசமான வாக்கு வங்கி. 

கடந்த காலங்களில் எல்லாம் முக்குலத்தோர் சமூகத்தின் பெருவாரியான வாக்குகள் அதிமுகவுக்கே சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு, முக்குலத்தோர் சமூக மக்களின் மனநிலையில் மாற்றம் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பு கடந்த சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கண்கூடாகத் தெரிந்தது. இந்தத் தேர்தல்களில் முக்குலத்தோரின் வாக்குகள் அதிமுகவுக்கு மட்டுமல்லாமல் இன்னும் சில கட்சிகளுக்கும் சிதறியது.

இதைப் புரிந்துகொண்டு இப்போது அனைத்துக் கட்சிகளுமே முக்குலத்தோர் வாக்கு வங்கியை இன்னும் கூடுதலாக பங்கு பிரிக்க முனைப்புக் காட்டுகின்றன. தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 11 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி என்பதால் இப்போது பாஜகவும் இந்த விஷயத்தில் அதிக முனைப்பு காட்டுகிறது. “அடுத்த வருடம் தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடியை பசும்பொன்னுக்கு அழைத்து வருவோம்” என்று அண்ணாமலை சொல்வதன் ரகசியமும் அதுதான்.

அதிமுகவை உருவாக்கும் முன்பே மாயத் தேவர் என்ற முக்குலத்தோரை திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெறவைத்தார் எம்ஜிஆர். அதிலிருந்தே முக்குலத்தோருக்கும் அவருக்குமான பந்தம் தொடர்கிறது. தனிக்கட்சி தொடங்கிய பிறகும் முக்குலத்தோருக்கு கணிசமான அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் எம்ஜிஆர். முக்குலத்தோரும் அவர் மீது அளவுகடந்த பாசமும் பக்தியும் வைத்திருந்தனர். அந்தப் பாசம் தான் அருப்புக்கோட்டையிலும் ஆண்டிபட்டியிலும் எம்ஜிஆரை அப்பீல் இல்லாமல் ஜெயிக்கவைத்தது.

எம்ஜிஆர் வழிதொட்டு ஜெயலலிதா காலத்திலும் இந்தப் பாசமும், பக்தியும் தொடர்ந்தது. ஜெயலலிதாவை வழிநடத்திய சசிகலாவும் இதற்குக் காரணமாக இருந்தார். தன்னை தேவர் வீட்டுப் பெண் என பகிரங்கமாகவே பிரகடனம் செய்துகொண்டார் ஜெயலலிதா. அப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாது, அனைத்து முக்கிய பதவிகளிலும் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசம் செய்துகொடுத்து தேவரின மக்களிடம் கூடுதல் அபிமானத்தைப் பெற்ற ஜெயலலிதா, ஆண்டு தோறும் (ஒரு சில ஆண்டுகள் தவிர) மறக்காமல் பசும்பொன் சென்று தேவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வருவதையும் முக்கிய கடமையாக வைத்திருந்தார். இதன் காரணமாக, சசிகலாவை ஒதுக்கிவைத்த நாட்களில்கூட முக்குலத்து மக்கள் ஜெயலலிதாவிடம் பிரியமாக இருந்தார்கள்.

ஆனால், ஈபிஎஸ் காலத்தில் இந்தக் காட்சிகள் எல்லாமே மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. ஒரு காலத்தில், முக்குலத்தோர் கோலோச்சிய இடங்களில் எல்லாம் கவுண்டர்களைக் கொண்டு வந்து அமர்த்தி தனது சாதிக்கு நேர்மையானவராக நடந்து கொண்ட ஈபிஎஸ், தன்னை முதல்வராக்கிய சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து விலக்கிவைக்கவும் துணிந்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கென 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிவித்ததன் மூலம் முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்தார் ஈபிஎஸ். இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தென் மாவட்டங்களில் வாக்குக் கேட்டுச் சென்ற இடங்களில் முக்குலத்தோர் மத்தியில் எதிர்ப்பை எதிர்க்கொண்டார்கள். அதேசமயம், கொங்கு மண்டலமும், வன்னியர் பெல்ட்டும் ஈபிஎஸ்ஸை தூக்கிவைத்துக் கொண்டாடியது. அவர் எதிர்பார்த்ததும் இதைத்தான். இதன் விளைவாக தென் மாவட்டங்களில் அதிமுக சரிவைச் சந்தித்தது. கொங்கு மற்றும் வன்னியர் பகுதிகளில் வாகை சூடியது.

தென் மாவட்டங்களில் அதிமுகவின் சரிவை பெரிதாக நினைக்காத ஈபிஎஸ், அடுத்ததாக ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் வேலைகளில் நேரடியாகவே இறங்கினார். அதில் வெற்றியும் கண்டார். இதனால், அதிமுக இப்ப நம்ம கட்சி இல்லை... அது கவுண்டர்கள் கட்சி என்ற மனநிலை தேவரினத்து மக்கள் மத்தியில் இப்போது மேலோங்கி நிற்கிறது. ஆக, முக்குலத்தோரின் முரட்டுத்தனமான அன்பைத் தவறவிட்ட ஈபிஎஸ், அவர்களின் வெறித்தனமான வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார். அந்த வெறுப்பு வேறுவிதமாக வெடித்து விடக்கூடாது என்பதற்காகவே இம்முறை பசும்பொன் செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்த்துவிட்டார் ஈபிஎஸ்.

முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு இனி மொத்தமாகக் கிடைக்காது என்று திட்டவட்டமாக அறிந்துகொண்ட பிற கட்சிகள், அந்த மக்களின் அபிமானத்தைப் பெற முயற்சிக்கின்றன. அந்த விஷத்தில் பாஜக படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு சளைக்காத வகையில் ஓபிஎஸ்ஸும் மல்லுக்கு நிற்கிறார். அவருக்கான அடையாளமே அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயம் தான் என்பதால் இந்த விஷயத்தில் அவர் ரொம்பவே மெனக்கிடுகிறார்.

அதிமுக சார்பில் தேவருக்குச் சாத்தப்படும் தங்கக்கவசத்தை இதுவரை தனது கையால் எடுத்துக்கொடுத்து வந்த ஓபிஎஸ், இம்முறை அது நடக்காது என்று தெரிந்ததால் தனது சொந்த செலவில் தேவருக்கு பத்தரை கிலோ எடையில் வெள்ளிக்கவசம் செய்துகொடுத்து முக்குலத்து மக்களின் அபிமானத்தைப் பெற்றார். ஈபிஎஸ் பசும்பொன் வருகையை ரத்துசெய்துவிட்ட நிலையில், 100 வாகனங்களில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ வந்து தேவருக்கு அஞ்சலி செலுத்தி செல்வாக்கை நிரூபித்தார் ஓபிஎஸ்.

இதேபோல் முக்குலத்து வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கத் துடிக்கும் பாஜகவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சின்னச் சின்னத் தலைவர்களை கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வாரி வழங்கி வருகிறது. கட்சியின் முக்கிய தலைவர்களை தென் மாவட்டங்களுக்கு அழைத்து வந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்துகிறார்கள். அந்த மேடைகளிலும்  முக்குலத்தோர் சமூகத்தினரை கட்சியில்  இணைத்து பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கிறார்கள். 

இந்த வருடம் தேவர் ஜெயந்திக்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார். “இன்றைய சூழ்நிலையில் பசும்பொன் தேவர் மீண்டும் தேவைப்படுகிறார்” என்ற அவரது பேச்சு அந்த  மக்களை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தேவரினத்து இளைஞர்களை பாஜகவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பிரதமர் மோடியும்,  ’பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.  அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்’ என்று தேவரை நினைவுகூர்ந்தது குறிப்பிடத் தக்கது. முக்குலத்தோரை தங்கள் பக்கம் இழுக்க இப்படி எல்லாம் பாஜக காரியமாற்றி வருகிறது.

திமுகவிலும் முக்குலத்தோர் இருந்தாலும் அதிமுகவை ஒப்பிடுகையில் அது கம்மிதான். அதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பற்றி இதுவரை திமுக பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால், சட்டப் பேரவை, மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஈபிஎஸ் தரப்புக்கு பாடம்புகட்ட திமுக அணிக்குச் சாதகமாக முக்குலத்தோரில் பெரும்பகுதியினர் தாமாக முன்வந்து வாக்களித்தார்கள். அதை சரியாகப் புரிந்து வைத்திருக்கும் திமுகவும், அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தது. அண்மையில் நடந்துமுடிந்த உட்கட்சித் தேர்தலிலும் வன்னியர்களுக்கு நிகராக முக்குலத்தோரையும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் அமர்த்தியது. முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதாலேயே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உரிய வழிமுறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தும் அதில் அவசரம் காட்டாமல் இருக்கிறார் ஸ்டாலின். 

தந்தை காலத்திலிருந்தே பசும்பொன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்டாலின், இம்முறை உடல்நிலை ஒத்துழைக்காததால் பசும்பொன் செல்லமுடியவில்லை. இருப்பினும் மகன் உதயநிதியை தனக்குப் பதிலாக அனுப்பிவைத்தார். இதையெல்லாம் செய்துகொண்டே இன்னொரு விஷயத்திலும் திமுக கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்கள். 

முக்குலத்தோரின் பெயர்களில் ஏராளமான சிறு சிறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளில் தகுதியான அமைப்புகளை அடையாளம் கண்டு தேர்தல் நேரத்தில் அவர்களை எல்லாம் திமுகவுக்கு ஆதரவாக பேசவைக்கும் திட்டத்தையும் திமுக தரப்பில் வைத்திருக் கிறார்களாம். இப்படிச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த முக்குலத்தோரும் திமுகவை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது கணக்காம்.

இவர்களைத் தவிர சசிகலா, தினகரன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார், டாக்டர் சேதுராமன் உள்ளிட்டவர்களும் முக்குலத்தோர் மத்தியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள இம்முறை பசும்பொன் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கெல்லாம் அந்த மக்கள் பெரிதாக ரியாக்‌ஷன் காட்டியதாகத் தெரியவில்லை.    

நேதாஜியின் இந்திய விடுதலைப் படையில்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு பெருமளவில் சேர்ந்தவர்கள் முக்குலத்து சமூகத்தினர் என்பது வரலாறு.  தேவருக்காக ராமநாதபுரம் மன்னரையே தோற்கடித்துக் காட்டியவர்கள் முக்குலத்து மக்கள். அந்தளவுக்கு தாங்கள் ஏற்றுக்கொண்ட  தலைவருக்கு எப்போதும்  விசுவாசமாக இருப்பார்கள்.

அப்படியான ஒரு தலைமை தற்போது தங்களுக்காக இல்லை என்பதே அந்த மக்களின் மனக்குறை. இதைப் புரிந்துகொண்டு எந்தக் கட்சி அவர்களின் வாட்டத்தைப் போக்க உண்மையாகவே முன்வருகிறதோ அவர்களுக்கே தென் மாவட்டங்கள் இனி ஜெயமாகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in