அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

எல்லாம் புதுமுகங்கள்... என்ன நினைக்கின்றன கட்சிகள்?!

பொதுவாக தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒரேமாதிரியான அனுகுமுறையைத்தான் கடைபிடிக்கும். தொகுதியில் உள்ள பெரும்பான்மை சாதி, மக்களுக்கு அறிமுகம், பணம் செலவு செய்வதற்கான பொருளாதார வசதி ஆகியவைதான் அளவுகோல்களாக இருக்கும். ஆனால் இந்தமுறை கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பெருத்த வித்தியாசம் நிலவுகிறது.

புதுமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்
புதுமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்

பாஜகவை பொருத்தவரை அனுபவமும், அறிமுகமும் வாய்ந்தவர்களாக பொறுக்கியெடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், திமுக சரிபாதி புதியவர்களையும்,  அதிமுக முற்றிலும் புதியவர்களையும் களமிறக்கியுள்ளது. ஆரம்பம் முதலே சரி பாதி பெண்களுக்கு என்கிற அறிவிப்பின்படி 20 இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. புதியவர்கள் களமிறக்கப்பட்டிருப்பதற்கு திமுக, அதிமுக இடையே தனித்தனியான காரணங்கள் இருக்கிறது.

பாஜகவை பொறுத்தவரை அவர்கள் கட்சியில் இருக்கிற விஐபிக்களாக பொறுக்கியெடுத்து வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆளுநராக இருந்தவர், மாநிலத்தலைவர், மத்திய அமைச்சர், மாநில நிர்வாகிகள் என்று தேடித்தேடி எடுத்து வேட்பாளர்களைக் களமிறங்கியுள்ளனர். அறிமுகமான பிரபல தலைவர்களை களமிறக்கினால் தான் தாங்கள் நிர்ணயித்திருக்கும் வெற்றி இலக்கை அடையமுடியும் என்று பாஜக கருதி வேட்பாளர் தேர்வில் இந்த அளவிற்கு கவனம் கொடுத்திருக்கிறது. இதன்மூலம் வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலை அவர்களுக்கு மிக எளிதாகியிருக்கிறது.

அமமுக வேட்பாளர்கள்
அமமுக வேட்பாளர்கள்

திமுகவை பொருத்தவரை உளவுத்துறை அறிக்கை மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு என்கிற ரீதியில் 21 பேரில் 11 பேர் புதியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். திமுக தன்னுடைய வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த நிதானம் காட்டியிருக்கிறது. தற்போதைய எம்.பிக்களில் பணிகள் சிறப்பாக இருந்தது என்று மக்களும், திமுக தலைமையும் கருதியவர்களுக்கு மட்டும்தான் மீண்டும் சீட் வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய எம்.பிக்களில் தருமபுரி தொகுதியில் சர்ச்சைநாயகன் செந்தில்குமாருக்குப் பதிலாக மணி என்பவருக்கும், சேலத்தில் எஸ்.ஆர். பார்த்திபனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கும், கள்ளக்குறிச்சியில் கௌதம சிகாமணிக்குப் பதிலாக மலையரசனுக்கும், பொள்ளாச்சியில் கு. சண்முகசுந்தரத்திற்குப் பதிலாக ஈஸ்வரசாமிக்கும், தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலி என்பவருக்கும், தென்காசியில் தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக ராணி ஸ்ரீகுமாருக்கும்  வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த சில தொகுதிகளை அவர்களுக்கு கொடுக்காமல் திமுக தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.  கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட கோவை தொகுதியில் கணபதி ராஜ்குமாரும், பெரம்பலூர் தொகுதியில் அருண் நேருவும், தேனி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், ஈரோட்டில் பிரகாஷும், ஆரணியில் தரணிவேந்தனும் திமுகவால் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தங்க தமிழ்செல்வனைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள். ஏற்கனவே எம்.பியாக இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை, மக்களிடம் அவர்கள்மீது அதிருப்தி நிலவுகிறது என்ற உளவுத்துறை அறிக்கையே அவர்களை தவிர்த்துவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது. 40 க்கு 40 என்ற வெற்றியைப்பெற திமுக இந்த திட்டத்தை வகுத்திருக்கிறது. 

அதிமுகவை பொறுத்தவரை மிகுந்த தைரியத்துடன் 33 வேட்பாளர்களில் 32 புதிய முகங்களை களமிறக்கியுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 33 பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் இருமுறை போட்டியிட்டவர். மற்ற 32 வேட்பாளர்களும் புதுமுகங்கள். 5 பேர் மருத்துவர்கள், 4 பேர் பொறியியல் பட்டதாரிகள், 2 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 4 பேர் வழக்கறிஞர்கள், 9 பேர் பட்டதாரிகள். ஒரு முன்னாள் அரசு அலுவலர், ஒரு சி.இ.ஓ, 4 இளைஞர்கள், 8 தொழிலதிபர்கள் வேட்பாளர்களாகியிருக்கிறார்கள். 

இது கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவது போலத்தான் என்றாலும் பழையவர்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதுதான் கள எதார்த்தம். அதிமுக 3 அணிகளாக பிரிந்ததால் பலமிழந்து கிடக்கிறது. இன்னொருபக்கம் வலுவான  கூட்டணியை அதிமுகவால் அமைக்க முடியாததும் அக்கட்சிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் பாமக வந்துவிட்டால் அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும் என்று போட்டியிடுவதற்கு பலரும் தயாராகவே இருந்தார்கள்.

ஆனால் கூட்டணியில் இருந்து பாஜக போய்விட்ட நிலையில் களத்தில் நின்று செலவு செய்வதை பழையவர்கள் யாரும் விரும்பவில்லை. உதாரணத்திற்கு மயிலாடுதுறை தொகுதியில் 54 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் தங்களுக்கு சீட் வேண்டாம் என்று அனைவருமே மறுத்து விட்டனர். அதனால் மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் மகனையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இப்படி பழைய ஆட்கள் பலரும் விருப்பம் காட்டாததால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். 

விசிகவைப் பொறுத்தவரை அதே தொகுதிகள், அதே வேட்பாளர்கள். புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் அதே தொகுதிகள், அதே வேட்பாளர்கள் தான். அமமுகவில் பழையவரான தினகரன் பழைய தொகுதியிலும், புதியவர் செந்தில்நாதன் திருச்சியிலும் களமிறங்கியுள்ளனர்.  

பாஜக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிடும் பாமக, சரிபாதி புதியவர்களை களமிறக்கியுள்ளது. சௌமியா அன்புமணி, தங்கர்பச்சான் என தேர்தலுக்கு புதியவர்களும், வழக்கறிஞர் கே.பாலு, திலகபாமா என பழைய முகங்களுமாக வேட்பாளர் பட்டியல் கலவையாக இருக்கிறது. தேமுதிகவிலும் சிவக்கொழுந்து, பார்த்தசாரதி என்ற அனுபவ ஆட்களும், விஜயபிரபாகரன் போன்ற புதியவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பழையவர்கள், புதியவர்கள் என்பதைத்தாண்டி வேட்பாளர் தேர்வில் இப்படி அனைத்துக் கட்சிகளுமே பலவித கணக்குகளை போட்டுப்பார்த்தே தேர்வு செய்திருக்கின்றன. இது எல்லாமே வெற்றி வியூக கணக்குகள் தான். இதனால் எந்த அளவுக்கு பயன் கிடைக்கும் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in