
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த தினம் மற்றும் 61-வது குருபூஜை விழா ஆகியவை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பிரம்மாண்டமான தேவர் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் காலையிலிருந்து தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காலை 8 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், தேவர் உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து வந்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் பெருந்திரளாக வந்திருந்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு செல்ல இன்று காலை மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 50 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் புறப்பட்டார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு வந்தார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி அதனைத் தொடர்ந்து பசும்பொன் புறப்பட்டு சென்றார்.
படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து