`தங்கம், வைரத்திற்கு ஜிஎஸ்டியைக் குறைத்து, அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது கொடூரமான கேலிக்கூத்து'

மதுக்கூர் ராமலிங்கம் காட்டம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஜிஎஸ்டியைக் குறைத்து, அன்றாட தேவையான அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது ஒரு கொடூரமான கேலிக்கூத்தாக உள்ளது என்று சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உணவுப் பொருள்களுக்கான 5% ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று மதுரை அவனியாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் பேச்சாளருமான மதுக்கூர் ராமலிங்கம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுக்கூர் ராமலிங்கம், "அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியினால் அரிசி விலை உயரும் அபாயம் உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் மட்டுமல்ல அரிசி ஆலை அதிபர்களும், சில்லறை வர்த்தகர்களும் கூட இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரிசி மீது வரி விதிப்பது என்பது மக்கள் வயிற்றில் நேரடியாக அடிப்பதற்கு சமமானது. அதுபோல் தயிர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் உள்ள ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயர்த்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு, மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதற்கான காரணம் ஜிஎஸ்டி வரி. அனைத்து உணவு பண்டங்களுக்கும் ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, மக்களின் அன்றாட தேவையான அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது என்பது ஒரு கொடூரமான கேலிக்கூத்தாக உள்ளது. இதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குகிற வகையில் தான் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விலைவாசி குறித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். அதை ஏற்க மறுத்த உறுப்பினர்களை மக்களவையில் சஸ்பெண்ட் செய்தார்கள். திமுக, சிபிஎம் உள்பட மாநிலங்களவை உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்கிறார்கள். விலைவாசி உயர்வு குறித்து, வரி உயர்வு குறித்து பேசக்கூடாது என்பதும், மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in