தலைமை அலுவலகம் செல்கிறாரா ஓபிஎஸ்?: போலீஸ் குவிப்பால் அதிமுகவில் பரபரப்பு!

தலைமை அலுவலகம் செல்கிறாரா ஓபிஎஸ்?: போலீஸ் குவிப்பால் அதிமுகவில் பரபரப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவதை தடுப்பதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றிய நிலையில் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்ற போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரிடையே கலவரம் வெடித்தது. இந்நிலையில் அந்த அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தலைமை அலுவலக சாவி கொடுக்கப்பட்டது. பொதுக்குழு கலவரத்திற்குப் பிறகு கடந்த 8-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.

இந்நிலையில் ஓபிஎஸ்சும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக அவரது ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வருவதையொட்டி பாதுகாப்பு வேண்டி, அவர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

அனுமதியை மீறி ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தால், அங்கு மீண்டும் கலவரம் வெடிக்கும் என்பதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அலுவலகத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டி டிஜிபி அலுவலகத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலக பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in