பாஜக நிர்வாகிகளுக்கு திடீர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: என்ன காரணம்?

தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பாஜக மாநில துணைத் தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மற்ற நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.

தமிழக பாஜக மண்டலத் தலைவர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், "பாஜகவினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் நகர பாஜக அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருப்பு முருகானந்தம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்து அமைப்புகளின் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கேரளாவில் தொடர்ந்து வன்முறைகளும், கொலைகளும் நிகழ்ந்து வருவதன் அடிப்படையில், இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர்" என்றார்.

ஆனால், போலீஸ் தரப்போ, “பாஜக மாநிலத் தலைவரின் ஆடியோ வெளியானதை அடுத்து, பாஜக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என கூறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in