பாமகவுக்கு உறுப்பினர்கள் 4 பேர்தான், ஆனால் வெற்றி

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலில் நடந்தது என்ன?
பாமகவுக்கு உறுப்பினர்கள் 4 பேர்தான், ஆனால் வெற்றி
ஆதரவளித்த உறுப்பினர்களுடன் வெற்றி பெற்ற ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியின் தலைவர் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது. வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி 15 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த பேரூராட்சியில் திமுக கூட்டணியின் சார்பில் 7 பேர் வெற்றி பெற்றனர். மதிமுகவை சேர்ந்த சரவணன் என்பவரும் அதில் ஒருவர். திமுக கூட்டணியில் இந்த பேரூராட்சி தலைவர் பதவியிடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. சரவணன் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எதிர்ப்புறம் நான்கு உறுப்பினர்களை கொண்ட பாமக, இரண்டு உறுப்பினர்களை வைத்திருந்த அதிமுக மற்றும் சுயேச்சைகள் இருவருடன் சேர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான எட்டு இடங்களைக் கையில் வைத்திருந்தது. தலைவர் பதவிக்கு ம.க. ஸ்டாலின் போட்டியிட்டார். அனைத்து ஊர்களிலும் நடந்த தலைவர் தேர்தலின் போது இந்த பேரூராட்சியில் திமுக உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டு விட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் பிரச்சினை செய்தனர். வேட்பு மனுவும் கிழித்தெறியப்பட்டது. அதனால் அன்றைய தினம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ம. க. ஸ்டாலின்
ம. க. ஸ்டாலின்

இதனை எதிர்த்து பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த உத்தரவிட்டது. எதிர்வரும் 26-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

அதன்பின்னர் மூன்று நாட்கள் முன்னதாகவே 23-ம் தேதியே தலைவர் தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து அதன்படி இன்றைய தினம் தேர்தலை நடத்தியது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா தலைமையில், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், இரண்டு உதவி காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 400 போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் தேர்தலை கண்காணித்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவு நேரம் துவங்கும் வரை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. அதனால் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கொடுத்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுகவினர் இருவர், சுயேட்சைகள் இருவர், பாமக 4 என மொத்தம் எட்டுபேர் இருந்த நிலையில் பெரும்பான்மையும் இருந்ததால் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆதரவளித்த அதிமுகவுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்படும் என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. மாலையில் நடைபெற உள்ள துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் கமலா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in