‘ஸ்டாலின் அண்ணாச்சி, வருஷம் ரெண்டாச்சி; வன்னியர் இடஒதுக்கீடு என்னாச்சு?’ -இணையத்தில் டிரெண்டிங் செய்யும் பாட்டாளிகள்

தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின் நோக்கி விடுத்த கேள்விகளை, தேர்தல் நெருக்கத்தில் பாமகவினர் இணையவெளியில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

’எம்பிசி பிரிவில் வன்னியருக்கான உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முறையான தரவுகளுடன் நாடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 2 வருடமாகி விட்டது. ஆனால் அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்காதது ஏன்?. வன்னியர் சமூகத்தின் மீது அவருக்கு வன்மம் ஏன்?’ என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் கடந்த செப்டம்பரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ராமதாஸ் .

அந்த அறிக்கையுடன், ‘ஸ்டாலின் அண்ணாச்சி, வருஷம் ரெண்டாச்சி; வன்னியர் இடஒதுக்கீடு என்னாச்சு?’ என்ற தலைப்பில் பாமகவினர், வன்னியர் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்கான ஆதரவாளர்கள், புதிய இணையவெளி பிரச்சாரத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அவற்றில் வன்னியர் இட ஒதுக்கீடுக்காக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளையும் இணைத்து பதிவிட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருக்கத்தில் இந்த அறைகூவல் விடுக்கப்படுவதன் நோக்கம் திமுகவுக்கு எதிரான தேர்தல் அரசியலாக தென்பட்டாலும், திமுகவினர் அதனை சீண்டாது அமைதி காக்கின்றனர். ’சாதிவாரி கணக்கெடுப்புகளை மாநில அரசுகள் நடத்தலாம் என நீதிமன்றங்கள் கூறிய தமிழக அரசு அவ்வாறு நடத்தவில்லை. சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பது ஸ்டாலினின் வன்மம்’ என நேற்றைய தினம் ராமதாஸ் குரல் கொடுத்ததை தொடர்ந்து, இன்றைய தினம் இணையத்தில் பாமகவினர் பற்றிக்கொண்டுள்ளனர்.

ஸ்டாலினுக்கு பாமகவினர் கேள்வி
ஸ்டாலினுக்கு பாமகவினர் கேள்வி

இதனிடையே, ‘வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதத்துக்கும் அதிகமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளை இடஒதுக்கீடு வாயிலாக பெற்றிருக்கும்போது, அதற்கு குறைவாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்பது ஏன்?’ என்று திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் கேட்ட கேள்வியும், பாமகவினரின் அடுத்த தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. ராஜகண்ணப்பன் கூறியிருப்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரியும் பாமகவினர் இந்த இணைய டிரெண்டிங்கில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே பாமகவின் பிரதான தேர்தல் கூட்டாளியான பாஜக, பாமகவின் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வாய் திறவாது அமைதி காத்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவர்கள் விமர்சித்து வருவதால், சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமகவினருக்கு வெளிப்படையாக குரல் கொடுக்காது தமிழக பாஜவினர் மவுனம் காக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in