மீண்டும் திமுக கூட்டணிக்கு நகர்கிறதா பாமக?

சாந்தமான பேச்சு... முதல்வருடனான சந்திப்புகளின் பின்னணி
அன்புமணி ஸ்டாலினைச் சந்தித்தபோது...
அன்புமணி ஸ்டாலினைச் சந்தித்தபோது...

நீண்ட நாட்களுக்குப் பிறகு, "தம்பி ஸ்டாலின்" என்று உரிமையோடு அழைத்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த அவரது மகன் அன்புமணி ராமதாஸ் முதல்வரின் மேல் முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பின்னால் நடந்தவை என்பதுதான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டங்களையும், தியாகங்களையும் செய்திருப்பதாக தன்னை முன்னிறுத்தும் பாமக, அப்படி போராடிப்பெற்ற உள் ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டிருக்கும் நிலையில் கொதித்தெழுவது தானே இயல்பு. மாறாக, பாசம் காட்டுவதும், நேரில் சந்திப்பதுமான மென்மையான போக்கை கடைபிடிப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்புபவர்கள், இதெல்லாம் பாமக மீண்டும் திமுகவை நெருங்க ஆரம்பித்திருப்பதன் எதிர்வினைகள் என்கிறார்கள்.

தமிழக அரசியலில் தங்களுக்கான இடத்தை தக்கவைப்பதற்கும், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களைப் பெறுவதற்காகவும் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பாமக மாறிமாறிச் செய்யும் என்பதுதான் வரலாறு.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் திவாரி காங்கிரஸுடன் இணைந்து 116 இடங்களில் போட்டியிட்ட பாமக, நான்கு இடங்களில் மட்டுமே வென்றது. அடுத்துவந்த 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோத்து 4 எம்பி-க்களை பெற்றது. அடுத்த ஆண்டே 1999 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை கைகழுவிவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்த பாமக இம்முறை 5 எம்பி-க்களை பெற்றது. இரண்டே ஆண்டுகளில் அந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொண்டு 2001 பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக பக்கம் தாவிய பாமக ஆளும் கூட்டணியின் அங்கமானது.

2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பிய பாமக 5 எம்பி-க்களைத் தக்கவைத்துக் கொண்டது. 2006 பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் கூட்டணி அழைப்பையும் நிராகரித்துவிட்டு திமுக அணியிலேயே நீடித்தார் ராமதாஸ். அந்தத் தேர்தலில் பாமகவுக்கு கிடைத்த இடங்கள் 18. அதற்கு மேல் திமுகவின் உறவைத் தொடர விரும்பாத பாமக, 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கரம் பிடித்தது. அந்தத் தேர்தலில் தமிழக மக்கள் பாமகவுக்கு பலமான அடி கொடுத்தார்கள். இதனால் இந்தப் பழம் புளிக்கும் கதையாக அதிமுகவுக்கு குட்பை சொன்ன பாமக 2011 பேரவைத் தேர்தலில் திமுக அணியில் அங்கம்வகித்தது. இம்முறையும் சொல்லிக்கொள்ளும்படியாக சோபிக்கமுடியாமல் போனதால், 2014 மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தேசிய கட்சியான பாஜகவுடன் டீல் போட்டது பாமக. அந்தத் தேர்தலில் அன்புமணி மட்டும் வெற்றிபெற்றார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்த பாமக, அந்தத் தேர்தலில் ஓரிடத்திலும் வெல்லவில்லை. அப்படி சூடுபட்டதால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது. இம்முறையும் ஓரிடத்திலும் வெல்லமுடியவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் தயவை பெரிதாக நினைத்த அதிமுக முதல் ஆளாக அக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவந்தது. அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை மட்டுமே வென்றது பாமக.

கட்சி ஆரம்பித்த போது நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற நிலையை உருவாக்கி அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தது பாமக. ஆனால், கடந்த சில தேர்தல்களாக எந்தக் கட்சியோடு சேர்ந்தாலும் தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது. ஒரு காலத்தில் மத்திய அமைச்சர்களையே தங்களுக்காக வைத்திருந்த பாமகவுக்கு இப்போது மக்களவையில் பிரதிநிதித்துவமே இல்லாத நிலை. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலாவது ஜெயிக்கும் குதிரை எதுவென்று பார்த்து அதன் மீது சவாரி செய்து கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ராமதாசும், அவரது புதல்வர் அன்புமணியும். அப்படி ஜெயிக்கும் குதிரையாக இருவரும் இம்முறை தேர்வு செய்திருக்கும் கட்சி திமுக என்கிறார்கள்

கருணாநிதியுடன் ராமதாஸ்...
கருணாநிதியுடன் ராமதாஸ்...

சென்னையில் நடைபெற்ற பாமக அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில்கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். போராட்டங்கள் ஏதும் நான் அறிவிக்கப் போவதில்லை" என்றும் சொன்னார். “வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தை முதல்வர் பார்த்துக் கொள்வார், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது" என்று அன்புமணியும் பேசியுள்ளார்.

அப்பா, பிள்ளையின் பேச்சு திமுக தரப்புக்கு எந்த வகையிலும் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த பாமக, தற்போது ஆதரித்துப்பேசி வருகிறது. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பாமக எம் எல்ஏ-க்களான அருளும், சதாசிவமும் வழக்கத்துக்கு மாறாக முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினர். இதற்கு பாமக தலைமையிலிருந்து எவ்வித கண்டிப்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

சமீப காலமாகவே திமுக அரசு எடுத்து வரும் எல்லா நடவடிக்கைகளையுமே பாமக பாராட்டி வருகிறது. அதிமுகவும், பாஜகவும் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் தொடரும் பாமகவோ தொடர்ந்து தமிழக அரசை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறது. அதற்குக் காரணம், இம்முறை எப்படியாவது திமுக கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான்.

எப்போதும் ஜெயிக்கும் குதிரை மீது பணம் போடுவதுதான் ராமதாஸின் வழக்கம். அப்படியான குதிரையை சரியாக கணித்து தேர்ந்தெடுப்பதில் அவர் வல்லவர். அதன்படிதான் பாமக இருக்கிற கூட்டணிதான் வெற்றி பெறும் என்கிற ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கி வைத்திருந்தார். அந்த தோற்றம் தற்போது சிதைந்து போய் காணப்படும் சூழ்நிலையில் மீண்டும் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கிறது பாமக.

அதற்காகத்தான் பலசாலி குதிரையான திமுகவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது பாமக. தனது கூட்டணிக் கட்சிகளை இறுகப் பிடித்திருக்கும் கட்சியாகவும், தொடர் வெற்றிகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கிற கட்சியாகவும் இருக்கும் திமுகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்ற கணிப்பு பாமகவுக்கு இருக்கிறது. அதற்காகவே பாமக, திமுக மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் இத்தனை பரிவுகாட்டுக்கிறது அந்தக் கட்சி.

சில நேரங்களில் நேரடிச் சந்திப்புகளின் மூலம் திமுகவுடனான தனது கூட்டணியையும் பாமக உறுதி செய்திருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணம் உண்டு. 2011 பிப்ரவரியில் தனது பேரனின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கருணாநிதியைச் சந்தித்த ராமதாஸ், அப்போதே திமுக - பாமக கூட்டணியை முடிவு செய்துவிட்டு வந்தார். அதேபோல இப்போது கருணாநிதியின் மகனைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் ராமதாசின் மகன்.

வழக்கறிஞர் கே.பாலு
வழக்கறிஞர் கே.பாலு

பாமகவின் இந்த நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலுவிடம் பேசினோம். ‘’வன்னியர் உள் இட ஒதுக்கீடு தந்தமைக்காக நாங்கள் கடந்த சட்டபேரவைத் தேர்தலில்கூட எங்களுக்கான இடங்களைக் குறைத்துக் கொண்டோம். அதற்கு முன்பும் எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கிறோம்; போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்படி போராடி, தியாகம் செய்து கிடைத்த உள் ஒதுக்கீடு மீண்டும் நிரந்தரமாக கிடைக்கவேண்டும் என்பது மட்டும்தான் பாமகவின் இப்போதைய ஒரே நிலைப்பாடு. இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எங்களின் அரசியல் எதிர்காலம் கருதி இதை நாங்கள் கையாளவில்லை. எங்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போனாலும்கூட பரவாயில்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் பெற்றே தீரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தருவதில் உச்ச நீதிமன்றத்திற்கு ஆட்சேபனை இல்லை என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான சமகால தரவுகள் சரியில்லை என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று. அந்தத் தரவுகளை மீண்டும் சரிபார்த்து இணைத்து இந்த உள் இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு தமிழக அரசால் மட்டுமே முடியும். தமிழக முதல்வரும் இந்த ஒதுக்கீட்டை வழங்குவோம் எனக்கூறி அதற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறார். அதனால் போராட வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அதனால்தான் நாங்கள் மென்மையான போக்கைக் கடைபிடித்து வருகிறோம். மற்றபடி திமுகவை நோக்கி பயணிக்கும் அரசியல் நோக்கமெல்லாம் இதில் இல்லை” என்று உறுதியாகச் சொன்னார் பாலு.

பாலு இப்படிச் சொன்னாலும், நாளைக்கே உச்ச நீதிமன்றத்தில் உரிய தரவுகளைச் சமர்ப்பித்து வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை திமுக அரசு உறுதிசெய்துவிட்டால் தேர்தல் களத்தில் பாமக திமுகவை எதிர்த்தா களமாடும் என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நியாயமான கேள்வி தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in