உள் ஒதுக்கீடு ரத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்

உள் ஒதுக்கீடு ரத்தைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, அந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாமக சார்பில் மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சில அமைப்புக்கள் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 % உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும் பாமக உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இந்த இடஒதுக்கீடு அரசாணை தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை கண்டிக்கும் விதமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் , அதற்கு முறையான தரவுகளை சமர்ப்பிக்காமல் இருந்த தமிழக அரசை கண்டித்தும் பாமகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.