முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு’’முதல்வரை இதற்காகத்தான் சந்தித்தேன்’’ - அன்புமணி ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

’’வன்னியர் உள் ஒதுக்கீட்டால் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்தில் அரசுப்பணிகளில் இருப்போரின் சாதிவாரியான எண்ணிக்கை குறித்த தரவுகளை வெளியிட வேண்டும்’’ என்று முதல்வரை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி , கௌரவத் தலைவர் ஜி.கே.மணி , பாமக இணைப் பொதுச்செயலாளர்   ஏ.கே.மூர்த்தி , வழக்கறிஞர் பாலு ஆகியோர் சந்தித்தனர். 

சந்திப்பின்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டுக்குள்  வழங்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ’’வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கினர். வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக  வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.

போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர் , காவலர்களுடன் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். 

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும். நாடகக் காதல் தொடர்பாக இப்போது பேச நான் விரும்பவில்லை.

வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான  இடஒதுக்கீட்டில் எங்களுக்கு உடந்தை கிடையாது. அதில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் ஏன் சேர்க்கப்படவில்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in