திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுக - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விஷயத்தில் தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், 'தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது.

சென்னையில் கடந்த 30-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருந்தார். அதை வரவேற்று அடுத்த நாள் அறிக்கை வெளியிட்ட நான், அடுத்து சட்டப்பேரவை கூடும் வரை காத்திருக்காமல், உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலின் சூடு தணிவதற்கு முன்பாகவே, புதுக்கோட்டையில் நேற்று முன்நாள் செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில், ஒரே வாரத்தில் திங்கள்கிழமை ஓர் அமைச்சர் ஒரு நிலைப்பாட்டையும், சனிக்கிழமை இன்னொரு அமைச்சர் இன்னொரு நிலைப்பாட்டையும் தெரிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்ட போதே, இது வரவேற்கத்தக்க மாற்றம்... ஆனால், இது தடுமாற்றமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தேன். எதிர்பார்த்ததைப் போலவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. இது சரியல்ல.

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, மிகவும் தடுமாற்றமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் தான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து புதிய தடை சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆகஸ்ட் 4-ம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், அதேநாளில் அறிக்கை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உடனடியாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ஆனால், அடுத்த இரு வாரங்களில் புதிய சட்டம் என்ற நிலையிலிருந்து மேல்முறையீடு என்ற நிலைக்கு அரசு மாறிவிட்டது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு பதிலாக, அதிமுக அரசின் சட்டமே சரியானது என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக திமுக அரசு கூறும் காரணங்கள் தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றதற்கும், ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் காரணம் அதிமுக அரசு கொண்டு வந்த வலிமையற்ற சட்டம் தான் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சட்ட அமைச்சர் ரகுபதி வரை பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்கள். அவர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட பலவீனமான சட்டத்தை நம்பி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதும், இன்று வரை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாத அந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று நம்புவதும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது அதிசயங்கள்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் மட்டும் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று அதிகாலையில் கூட சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிக தொகையை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

எனவே, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மேல்முறையீடு தான் தமிழக அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணர்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in