முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் பாமக தலைவர் அன்புமணி!

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் பாமக தலைவர் அன்புமணி!

பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து இன்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதன் கெளரவத் தலைவர் ஜிகே மணி, மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோருடன் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் முன்வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “முதல்வரிடம் வாழ்த்து பெறுவதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைதோம். தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களைத் தீட்டி அதிக நிதி ஒதுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஒரு வருடம் வரை வறட்சி, மறு வருடம் அதிகம் மழை, வெள்ளம் என்பன போன்ற சேதங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அதைக் கட்டாயம் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல், மழை நீர் மேலாண்மை சம்பந்தமான பிரச்சினைகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

மேலும், “சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதுதான் பாமக. ‘பாமக 2.0’ என்ற விஷயத்தைப் படிப்படியாக மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழகம் முழுவதும் சென்று மக்களைச் சந்திக்கப் போகிறோம். எங்கள் கட்சிக்காரர்கள் நேர்மையான முறையில் நடந்துகொள்ள வேண்டும். மக்களுடைய மதிப்பைப் பெற வேண்டும். மக்களிடன் அன்றாடப் பிரச்சினைகளைக் கையில் எடுத்து போராடி ஆதரவைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். மொத்தத்தில் இனி வித்தியாசமான அணுகுமுறையைப் பார்க்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in