ஈபிஎஸ் 2 ஆண்டுகள் முதல்வராகத் தொடர பாமகதான் காரணம்: ஜெயக்குமாருக்கு கே.பாலு பதிலடி!

ஈபிஎஸ் 2 ஆண்டுகள் முதல்வராகத் தொடர பாமகதான் காரணம்: ஜெயக்குமாருக்கு கே.பாலு பதிலடி!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்வதற்கும், ஜெயக்குமார் அமைச்சராக தொடர்வதற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போது சொல்லியதில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக நான்கு அணிகளாக உடைந்துள்ளது” என்று தெரிவித்தது பரபரப்பை பற்றவைத்தது. இதற்கு நேற்று மிகக்கடுமையாக பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவால்தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்துள்ளது என்பதை மனதில் வைத்துப் பேசவேண்டும். அதிமுக தயவு இல்லையென்றால் பாமகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரமே கிடைத்திருக்காது” என்று கூறினார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, “1996-ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 தேர்தலை சந்தித்தார். அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளது. ஆனால், அதிமுகவின் வெற்றிக்கு பா.ம.க.தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை. மைனாரிட்டி திமுக என அதிமுக-வால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்த பா.ம.க., கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என எப்போதும் சொல்லியதில்லை.

பாமக-விற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யார்?. நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் முடிவெடுக்கப்படும்.

அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு ஊடகங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும். எடப்பாடி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்வதற்கும், ஜெயக்குமார் அமைச்சராக தொடர்வதற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போது சொல்லியதில்லை. அதிமுக வீழ்ந்தபோதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவை செயல்பாடுகளை எப்போதும் மறக்க கூடாது. பாமக பற்றிய ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும்” என்றும் கூறினார்.

பாஜக வாட்ச், திமுகவிற்கு மக்களிடம் அதிருப்தி போன்றவை குறித்தும் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவில் பேசியதாகவும், அதிமுகவை பற்றி மட்டும் பேசவில்லை எனக் கூறிய வழக்கறிஞர் பாலு, மக்களுக்கு தேவையானவற்றை ஆட்சியாளர்களிடம் கேட்டு பெறும் பணியை பாமக தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in