`இயற்கை என் தளபதியை பறித்துக் கொண்டதே’ - வேதனையில் ராமதாஸ்

இசக்கி படையாச்சி
இசக்கி படையாச்சி

பாமக நிறுவனர் ராமதாஸுடன் 45 ஆண்டுகளை கடந்து பணியாற்றிவந்த இசக்கி காலமானார். அவரின் மறைவு தன்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வன்னியர் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகளில் ஒருவரான இசக்கி படையாட்சி நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவு தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், எனது குறிப்பறிந்து கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவருமான இசக்கி படையாட்சி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் மறைந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வன்னியர் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகளில் ஒருவர் என்பதையெல்லாம் கடந்து எனது 45 ஆண்டு கால நண்பர் என்பது தான் எனக்கும், இசக்கி படையாட்சிக்கும் இடையிலான உறவு. கட்சிப் பணிகளை நிறைவேற்றித் தருவதில் எனக்குத் தளபதிகளாக விளங்கும் சிலரில் இசக்கி படையாட்சி முக்கியமானவர். பா.ம.க. தொண்டர்கள் அனைவருடனும் அன்புடன் பழகியவர்.

எப்போதும் துடிப்புடன் பணியாற்றி வரும் இசக்கி படையாட்சி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் தாமதமாகத் தான் தெரியவந்தது. நோயிடமிருந்து அவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக போராடினோம். ஆனால், நோயும், இயற்கையும் வென்றுவிட்டன. எனது தளபதி இசக்கி படையாட்சியை இயற்கை என்னிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது.

தைலாபுரம் தோட்டத்தில் நான் இருக்கும் நாளெல்லாம் காலையும், மாலையும் சந்திக்கும் இசக்கி படையாட்சி கட்சிப் பணிகள் குறித்து விவாதிப்பார். இன்னும் சிறிது நேரத்தில் இசக்கி வருவார் என்று நான் நினைத்தால், அடுத்த சில வினாடிகளில் அவர் என் முன் நிற்பார். இனி நான் அப்படி நினைக்கும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சும்.

இசக்கி படையாட்சியை இழந்து வாடும் அவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இசக்கி படையாட்சியின் சொந்த ஊரான விக்கிரமசிங்க புரத்தில் நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வுகளில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்துவர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in