மதுரையில் வாஜ்பாய்க்கு சிலை; அரசு அலுவலகங்களில் மோடி படம்!

ஆட்சியரிடம் மனு கொடுத்த முன்னாள் எம்எல்ஏ
மதுரையில் வாஜ்பாய்க்கு சிலை;
அரசு அலுவலகங்களில் மோடி படம்!
ஆட்சியரிடம் மனு கொடுக்கும் டாக்டர் சரவணன்

மதுரை மாநகர், மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் கவன ஈர்ப்புக்காக சில, பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குதிரையில் வந்தவர், நேற்று மதுரையில் நடந்த மாவட்டச் செயற்குழு கூட்டத்தில், “பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால், தாக்குங்கள்; ஒரு லட்சம் பரிசு தருகிறேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

கூடவே, ‘நான்கு வழிச்சாலைகள் அமையக் காரணமாக இருந்தது முந்தைய பிரதமர் வாஜ்பாய்தான். எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக மதுரையில், நான்கு வழிச்சாலை சந்திப்பான விரகனூர் ரிங்ரோட்டில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும்’ என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இதற்கிடையே, இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்துகொண்டிருந்தபோது பிரதமர் மோடியின் படத்துடன் அங்கு வந்த டாக்டர் சரவணன், ஆட்சியரிடம் நேரடியாக ஒரு மனு கொடுத்தார். அதில், ‘தமிழக அரசு அலுவலகங்களில் மாண்புமிகு முதல்வரின் படம் மட்டுமே வைக்கப்படுகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மோடி படம் வைக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு திட்டங்களுக்கான அறிவிப்புகள் அனைத்திலும் பிரதமர் படத்தையும் பொறிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் சரவணன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in