குஜராத்தில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுவிட்டது: அசோக் கெலாட் விமர்சனம்

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிராக தெளிவான எதிர்ப்பு அலை உள்ளது, இதன் காரணமாகவே பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நாளை நுழையவுள்ளது. இந்த நிலையில் ஜலவர் மாவட்டத்தில் உள்ள சன்வாலி கிராமத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அசோக் கெலாட் ஆய்வு செய்தார். அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், ராஜஸ்தான்-மத்திய பிரதேச எல்லையில் உள்ள யாத்திரையின் நுழைவு இடத்தையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், "குஜராத்தில் அரசுக்கு எதிரான அலை மிகவும் வலுவாக உள்ளது, அதனால்தான் மோடி ஜி மாநிலம் முழுவதும் பல இடங்களுக்குச் செல்கிறார். சமீபத்தில், அவர் ஒரு மெகா 50 கிமீ நீள சாலைப் பேரணியை நடத்தினார். இது போன்ற நிலைமை ஏன் என்று யோசிக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டு பிரதமர் குஜராத்தில் முகாமிட்ட காரணம் என்ன?. தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் மோடிக்கு உள்ளது என்றுதான் அர்த்தம்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in