கர்நாடக மாநிலம் மண்டியாவில் நீண்ட தொலைவுக்கு காரில் தொற்றியபடி ரோட் ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு, வழியெங்கும் மலர்களை வாரி மக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
கர்நாடக மாநிலத்துக்கான தேர்தல் மே மாதத்தில் நடந்தாக வேண்டிய சூழலில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. தேர்தல் தேதி அறிவித்து விட்டால், அரசின் நலத்திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதால், கடந்த 2 மாதங்களாக அவையும் களைகட்டியுள்ளன.
கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கர்நாடக மாநிலத்தை குறிவைத்து பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி இன்றும் தனி விமானத்தில் வந்து சேர்ந்தார். பெங்களூரு - மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, ரூ.16 ஆயிரம் கோடிக்கான புதிய வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் 2 கிமீ தொலைவுக்கு அவர் கார் கதவை திறந்தபடி ரோடு ஷோ மேற்கொண்டார். வழியெங்கும் அவருக்கு மக்கள் மலர்தூவி வரவேற்பு தெரிவித்தனர். பூ மழையில் நனைந்தபடி, காரில் தொற்றியபடியும் மோடி வலம் வந்தது சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.