
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், அவரது தந்தையும் மத்திய உள் துறை இணையமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவிவிலக மத்திய அரசு நிர்பந்திக்காதது ஏன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூரில் நேற்று (பிப்.10) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “தேசத்துக்குப் பதில் சொல்லும் தார்மிகக் கடமை பிரதமருக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவது அவரது தர்மம். இந்த தர்மம் வேறு எந்த தர்மத்தையும்விட உயர்வானது. இதைச் செய்யத் தவறும் அரசியல்வாதி, பிரதமர் அல்லது அரசு புறக்கணிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஆசிஷ் மிஸ்ரா பற்றிப் பேசிய பிரியங்கா, “அந்த மனிதர் ஜாமீன் பெற்றுவிட்டார், உங்களை (விவசாயிகளை) நசுக்கித் தள்ளிய அவர் விரைவில் சுதந்திரமாக உலவப்போகிறார். இந்த அரசு யாரைக் காப்பாற்றியது? அது விவசாயிகளைக் காப்பாற்றியதா? விவசாயிகள் கொல்லப்பட்டபோது காவல் துறையும் அரசு நிர்வாகமும் எங்கு இருந்தன?” என்றும் கேள்வி எழுப்பினார்.
லக்கிம்பூர் கெரி சம்பவத்தின்போது போலீஸார் எங்கும் தென்படவில்லை என்றும், கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் சென்றபோது மட்டும் அதைத் தடுக்க போலீஸார் வந்தனர் என்றும் பிரியங்கா கூறினார்.
நேற்று முன் தினம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார் பிரதமர் மோடி. அப்போது லக்கிம்பூர் கெரி சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது “உச்ச நீதிமன்றம் எந்த கமிட்டியை அமைக்க வேண்டும் என விரும்பியதோ, எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என விரும்பினாரோ அனைத்துக்கும் உத்தர பிரதேச அரசு சம்மதம் தெரிவித்தது. மாநில அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்கிறது” எனப் பதிலளித்திருந்தார்.