ஒவ்வொருவரிடமும் உறுதிமொழி கையெழுத்து: 2,500 பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தும் ஈபிஎஸ்!

ஒவ்வொருவரிடமும் உறுதிமொழி கையெழுத்து: 2,500 பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தும் ஈபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன் 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினரிடம் உறுதிமொழி பெரும் பணியை தொடங்கியுள்ளார் ஈபிஎஸ்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினரிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெரும் பணியை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செய்து வருகிறார். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன் 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினரிடம் உறுதிமொழி பெரும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்ததாகவும், அதற்கு முழுமையான ஆதரவு தருவதாகவும் உறுதிமொழி வாங்கப்பட்டு வருகிறது. வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த உறுதிமொழி பத்திரத்தை உச்சநீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒப்படைக்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in