ஒற்றுமையாக செயல்பட்டால் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம்: காங்கிரஸாருக்கு சச்சின் பைலட் அழைப்பு

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் ராஜஸ்தானில் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யும் சூழல் நிலவியது. ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கெலாட் கட்சியின் தலைவரானால், மாநில முதல்வர் பதவியை துறக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி ஒருவேளை அசோக் கெலாட் பதவி விலகினால், முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்கக் கூடாது என அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

மேலும், 2020ல் சச்சின் பைலட்டால் அசோக் கெலாட்டின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, கெலாட்டின் பக்கம் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்குத்தான் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நெருக்கடி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடும் முடிவை அசோக் கெலாட் கைவிட்டார்.

இந்த நிலையில் நேற்று கோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "2023 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதே எங்கள் குறிக்கோள், நாம் அனைவரும் கூட்டாக அதற்கான திசையில் செயல்பட வேண்டும். 2018ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கடின உழைப்பால் ஆட்சிக்கு வந்தது” என்றார்

பின்னர் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தொகுதியான ஜலாவருக்கு வந்த பைலட், “கடந்த தேர்தலில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எங்களின் கூட்டுப் பொறுப்பாகும்” என கூறினார்

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக சச்சின் பைலட் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். கோட்டா, ஜலவர் மற்றும் ஜல்ராபட்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று பேரணிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அவரின் ஆதரவாளர்கள் புத்துணர்ச்சியுடன் உள்ளனர்.

அதே நேரத்தில் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, " ராஜஸ்தானில் 2003ல் 120 இடங்களையும், 2013ல் 163 இடங்களையும் பாஜக பெற்றுள்ளது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால், இப்போது 163 இடங்களில் வெற்றிபெறலாம். தற்போதைய காங்கிரஸ் அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே ஜாதியாகப் பிரிந்து விடாதீர்கள். ஒற்றுமையாகப் போராடினால் வரலாற்று வெற்றி நிச்சயம். அசோக் கெலாட் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது” என்றார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in