கலசம் தூக்கியதன் பின்னால் இருக்கும் ‘கணபதி’ சென்டிமென்ட்!

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கீதா ஜீவனும் அவரது சகோதரரும் மேயருமான ஜெகனும் கலசத்தோடு வலம் வரும் படங்களை வைத்து பாஜகவினர் அரசியல் பகடி செய்வதாக நேற்று எழுதி இருந்தோம். இப்போது இந்த பிள்ளையார் கோயிலின் அரசியல் சென்டிமென்ட் குறித்து புதிதாக இன்னொரு செய்தி வலம்வர ஆரம்பித்திருக்கிறது. கருணாநிதியின் முரட்டுபக்தர் என கூறப்படும் மறைந்த பெரியசாமியும் அவரது வாரிசுகளும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும், பெரியசாமி உயிருடன் இருந்தவரை போத்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி அமர்க்களப்படுத்துவார். இதற்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது.

என்.பெரியசாமி
என்.பெரியசாமி

போத்தி விநாயகர் சிலையானது முதலில் சாலையின் நடுவில் இருந்தது. பெரியசாமி தூத்துக்குடி நகர்மன்ற தலைவராக இருந்தபோது சிலையை ஓரத்தில் எடுத்துவைத்து சில புனரமைப்புகளும் செய்தார். தொந்தி கணபதியைக் கவனித்த பிறகு தனது அரசியல் வாழ்க்கையில் எல்லாமே ஏறுமுகமாக அமைந்து போனதால் போத்தி விநாயகரை விடாமல் போற்ற ஆரம்பித்தார் பெரியசாமி. உயிருடன் இருந்தவரைக்கும் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாகக் கொண்டாடிய பெரியசாமி, கோயிலையும் படிப்படியாக வளர்த்தார். பிள்ளையார் சதுர்த்தி விழாவில் மைக் பிடிக்கும்போதெல்லாம் இந்தப் பிள்ளையாரைக் கவனித்த பின்புதான் தனது அரசியல் வாழ்வில் ஏற்றம் வந்ததாக நெகிழ்ச்சியுடன் சொல்வார் பெரியசாமி. ஆக, தந்தை வழியில் தங்களுக்கும் போத்தி விநாயகர் சென்டிமென்ட் தொடர்வதால் பெரியசாமியின் வாரிசுகளும் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் போத்தி விநாயகரைக் கொண்டாடுகிறார்கள் என்றார்கள் முத்துநகர் உடன்பிறப்புகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in