முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின் மகன்: மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்

முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின்  மகன்: மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்

ஏக்நாத் ஷிண்டேவின் மகனான மக்களவை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மகாராஷ்டிர முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

முதல்வர் நாற்காலியில் ஸ்ரீகாந்த் ஷிண்டே அமர்ந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ள சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, "ஆதித்யா தாக்கரே அமைச்சராக இருந்தும் அவர் அரசின் விவகாரங்களை கையாளும் போது இவர்கள் அதனை கேள்வி கேட்டனர். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமைச்சரும் இல்லை, எம்.எல்.ஏ.வும் இல்லை. அவர் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். நாற்காலி குறித்து கேலி செய்ததற்காகவும், ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற பசிக்காக தன்னையும் கேலி செய்ததற்காகவும் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-க்கு எனது அனுதாபங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிகாந்த் வார்பே, “சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேயின் புகைப்படத்திற்கு முன்னால் ஸ்ரீகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார். புகைப்படத்திற்கு கீழே வைக்கப்பட்டிருந்த பலகை மற்றும் நாற்காலியின் பின்னால் 'மகாராஷ்டிரா அரசு-முதல்வர்' என்று எழுதப்பட்டுள்ளது. அவர்தான் இப்போது சூப்பர் சிஎம், இது என்ன ராஜதர்மம்?" என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பதிலளித்த ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டே, இது தங்களின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், தனது தந்தைக்காக நியமிக்கப்பட்ட எந்த அதிகாரப்பூர்வ நாற்காலியிலும் தான் அமரவில்லை என்றும், இது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் இல்லை. இது தானேயில் உள்ள தங்களின் தனிப்பட்ட குடியிருப்பு மற்றும் அலுவலகம் என தெரிவித்தார்.

மேலும், “முதல்வர் வீட்டிலிருந்து காணொலிக் கூட்டங்கள் நடத்துவதால் பெயர் பலகை இங்கு கொண்டு வரப்பட்டது. எனது தந்தை ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார். முந்தைய முதல்வர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததைப் போலல்லாமல், எனது தந்தை எப்போதும் நடமாடுகிறார். மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நானும் முதலமைச்சரும் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்துகிறோம். நான் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இல்லை. இந்த உத்தியோகபூர்வ பெயர் பலகை நகரக்கூடியது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in