பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோ விசாரணைக்கான காவல்துறை உளவு போர்வையில், தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் என 40 நபர்களின் போன்கள் ஒட்டுக்கேட்புக்கு ஆளாகியிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வரான ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா மகனும், கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி எழுப்பியுள்ள போன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அதனை மறுத்திருப்பதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
குமாரசாமியின் அண்ணனும், மஜத கட்சி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. குறித்தான வழக்கு விசாரணையின் பெயரில் தங்களது போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக குமாரசாமி புலம்பியிருக்கிறார்.
"எங்கள் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியும். என்னைச் சுற்றியுள்ளவர்களின் 40 போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. போனில் என்ன விவாதம் நடந்தாலும் வெளியே கசிந்து விடுகிறது" என்று குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ’முதல் குடும்பத்து’ வாரிசும், தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், அவை குறித்தான பல்லாயிரம் வீடியோக்கள் பொதுவெளியில் பரவியதும் அக்கட்சியினரை நெளிய வைத்துள்ளன. மேலும் பிரதான கூட்டணியான பாஜகவையும் இந்த விவகாரம் சங்கடத்தில் தள்ளியுள்ளது.
33 வயதாகும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் ஜெர்மனியில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவருக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான மக்களின் கோபம் ஜேடிஎஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது பாய்ந்திருப்பதால், பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்பி, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு குமாரசாமி பகிரங்க கோரிக்கை வைத்துள்ளார்.
"உங்கள் தாத்தா(தேவ கவுடா) எப்போதுமே நீங்கள்(பிரஜ்வல்) அரசியல் ரீதியாக வளர வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய நற்பெயருக்கு மரியாதை செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு உடனே திரும்பி வாருங்கள்" என்று அவர் கோரினார். பிரஜ்வலின் பாலியல் மோசடி விவகாரம் முன்பே தனக்குத் தெரிந்திருப்பின் அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்திருக்க மாட்டேன் என்றும் கூறினார்.
இது மட்டுமன்றி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். "வேதனையில் ஆழ்ந்திருக்கும் எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் துயரங்களை நான் புரிந்துகொள்கிறேன். எந்த வகையிலும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வெட்கத்தால் தலைகுனிய வைக்கிறது" என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் வெளிப்பட்டதன் பின்னணியிலான சதி வேலைகளின் சூத்ரதாரி என கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவக்குமாரை குற்றம்சாட்டினார். மொத்த சதிவலையையும் தன்னைச் சுற்றி சிவக்குமார் பின்னியிருப்பதாகவும், போன் ஒட்டுக்கேட்பு மூலமாக தனது சித்துவேலையை அவர் தொடர்ந்து வருவதாகவும் குமாரசாமி குறைபட்டிருக்கிறார். ஆனால் இவற்றை முழுவதுமாக மறுத்திருக்கும் டி.கே.சிவக்குமார், ’அரசியல் விளம்பரத்துக்காக குமாரசாமி நாடமாடுவதாக’ சாடியிருக்கிறார்.