
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்பட்ட நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சட்ட கோரிக்கையை ஏற்று பிஎஃப்ஐ அமைப்பின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஃப்ஐ அமைப்பின் கணக்கு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகளின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஎஃப்ஐ மட்டுமின்றி ரெஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரெஹாப் ஃபவுண்டேஷன் ஆகிய 8 துணை அமைப்புகளின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் கணக்குகளும் நிரந்தரமாக முடக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை என நேற்று முன்தினம் அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, ஐ எஸ் அமைப்புடன் தொடர்பு என பல்வேறு வகையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த அமைப்புகள் செயல்படுவதாக என்ஐஏ கூறியுள்ளது.