பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட்: அடுத்தடுத்த சம்பவங்களால் தொடரும் பதற்றம்!

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட்: அடுத்தடுத்த சம்பவங்களால் தொடரும் பதற்றம்!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் இந்து முன்னணியினர் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதுபோல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர்ப் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாகத் திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியை சேர்ந்த பாஜக மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜிக்கு சொந்தமான  இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் செந்தில் பால்ராஜிக்கு சொந்தமாக இடத்தில் ஆட்டோ கல்சல்ட்டிங் அலுவலகம் உள்ளது. அந்த இடத்தில் அவரின் கார் மற்றும் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவத்தில் 1 கார், 5 பைக்குகள் தீக்கிரையாகின.

இதுபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புலியம்பட்டியைச சேர்ந்த பாஜக நிர்வாகி வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட கார் மர்மமான முறையில் எரிந்தது. மேலும், சென்னை, தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் சீதாராமன் வீட்டிலும் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்து மத அமைப்பினர் அலுவலகம் மற்றும் வீடுகளைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள இந்து மத அமைப்புகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொடர்பான இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in